சிறப்பு செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்களை மட்டுமே விவாதத்திற்கு அழைக்க வேண்டும் – ஊடகங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்

சென்னை:-

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை மட்டுமே விவாதத்திற்கு அழைக்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிப்பு வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளையும், பல்வேறு நிகழ்வுகளில் கழகத்தின் நிலைப்பாட்டையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவும், ஊடகங்களின் விவாதங்களில் பங்குபெறவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 17 பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத, கழகத்தின் அங்கீகாரம் அற்ற தனி நபர்களை கழகத்தோடு தொடர்புபடுத்துவதையும், கழகத்தவர்களாக அடையாளப்படுத்துவதையும், அவர்களின் கருத்துகளை, கழகத்தின் கருத்துகளாக எதிரொலிக்கச் செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.கழக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கூறுகின்ற கருத்துகளுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மையில், சன் செய்திகள் தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்குபெற்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், கழகத்தின் பிரதிநிதி என்று அடையாளப்படுத்தப்பட்டதை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அந்த நபர் கட்சியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டவர் என்பதை சுட்டிக்காட்ட விழைகிறோம்.

கழகத்தின் அங்கீகாரம் பெறாதவர்களை அழைக்க வேண்டாம் என்று கேட்டு 13.6.2019 அன்று, அனைத்து தொலைக்காட்சி, சமூகத் தொடர்பு ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்ததையும், தங்கள் ஊடகங்கள் வழியாக அப்படிப்பட்ட தனி நபர்கள் கருத்துகளைத் தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும், அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு கடிதம் அனுப்பப்பட்டதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

“செய்தித் தொடர்பாளர்கள்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு எவரையும் கழகத்தின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்த வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு அங்கீகாரம் அற்றவர்களை கழகத்தோடு இணைத்து அடையாளப்படுத்தினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, அன்புகூர்ந்து அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும், கழகத்தின் கருத்துகளையும், நிலைப்பாட்டையும் தெரிந்துகொள்ள, கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.