தற்போதைய செய்திகள்

இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித மாற்றமும் கிடையாது : அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்:-

இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதிபட தெரிவித்தார்.

நாமக்கல்லில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது தமிழகத்தில் 2022-ம் ஆண்டில் மூடப்பட வேண்டிய அனல் மின்நிலையங்களின் பட்டியலில் தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையங்கள் உள்ளன என்று மத்திய மின்வாரியத்துறை அறிவித்துள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு சில நிபந்தனைகளை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, சில உபகரணங்களை அந்த நிலையங்களில் நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். அதிக ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தை அகற்றி விட்டு புதிய நிலையம் ஏற்படுத்தப்படும். அந்த பழைய யூனிட்டில் வேலை செய்யும் 250 தொழிலாளர்கள், அவர்களின் விருப்பதிற்கு ஏற்ப, வேறு பணிக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவது கிடையாது. 25 ஆண்டுகாலமே அனுமதி கொண்ட தூத்துக்குடி அனல் மின்நிலையம், மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, 35 ஆண்டு காலம் நடைமுறையில் உள்ளது. அதில், 210 மெகாவாட் உற்பத்தி செய்கின்ற 4 யூனிட்டில், ஒரு யூனிட் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அனல் மின் உற்பதியில் எவ்வித தடங்கலும் இல்லை. கோடை காலத்தில் மின்வெட்டு பிரச்சினை வருவதற்கு சாத்தியமே இல்லை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செலவினங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசிடம் மின்சாரம் கொள்முதல் செய்தல், நிலக்கரி விலையும், அதனை கொண்டு வருவதற்கும் செலவுகள் அதிகம், ஊழியர்களுக்கு சம்பளம் இதுபோன்ற பல்வேறு செலவினங்களுக்கு மாநில அரசு அதற்குண்டான மானியத்தை கொடுத்து விடுகிறது. இதனால் எந்தவித பிரச்சினையும் இன்றி மின்வாரியம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. காற்றாலை மின்சாரம் 8507 மெகாவாட்டும், சூரியசக்தியை பொறுத்தவரை சுமார் 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 13,554 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கிறது. இந்தியாவிலேயே இது 43 சதவீதம் ஆகும். இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரபுசாரா எரிசக்திதான் தேவை என்பதை அறிந்து மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதுவரை வீடுகள்தோறும் சூரிய மின்உற்பத்தி திட்டத்தில் சுமார் 50 மெகாவாட் அமைத்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு டிஇடிஎ ஏஜென்சி ஆக உள்ளது.

புதிய மின் இணைப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. 2017-ம் ஆண்டுமுதல் ஒரே நாள் மின் இணைப்பு திட்டத்தில் இதுவரை 7 லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.கடலாடி மின்உற்பத்தி திட்டத்தை சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அம்மா அவர்கள் அறிவித்திருந்தார். தற்போது, கடலாடியில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டமானது, கமுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலாடி பகுதி, மன்னார் வளைகுடா அங்கு அமைந்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கமுதியில் அமைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளதற்கு, அனுமதி அளிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே கமுதி மின் உற்பத்தி திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும்.

தமிழகத்தில் தட்கல் முறையில் விவசாய மின்இணைப்பு வழங்கப்பட்டு, அத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இம்முறையில் யாரையும் வற்புறுத்தி மின்சார இணைப்பு அளிப்பது கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தட்கல் மின் இணைப்பு பெற்று வருகின்றனர். இதனால் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஆண்டுக்கு தட்கல் முறையில் 10 ஆயிரமும், இலவச இணைப்புகள் 10 ஆயிரமும் விவசாய பணிகளுக்கு மின்இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் கூடுதலாக இலவச மின் இணைப்பு கேட்கப்பட்டுள்ளது குறித்து, முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர், உடுமலை-அரசூர் உயர்மின் கோபுர பாதையின்கீழே நின்றுகொண்டு, மின்காந்த அலைகள் பரவுவதாக கூறுகின்றனர். ஏற்கனவே அவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட மின் கோபுரங்களிலும் மின்காந்த அலைகள் வரத்தான் செய்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மின்காந்த அலைகளால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

எல்லா உயர் மின் கோபுரம் வெளியிலும் மின்காந்த அலைகள் வரத்தான் செய்யும். அதனால் விவசாயம் செய்வதற்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது. அரசியல் காரணங்களுக்காக உயர்மின் கோபுர திட்டங்களை ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர். தடையில்லாத மின்சாரம் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நிலத்திற்கு அடியில் உயர் மின் பாதை அமைத்தால் அவ்வளவு பாதுகாப்பு இல்லை என்பதால்தான் உயர் மின் கோபுரத்தில் அவை அமைக்கப்படுகின்றன. நிலத்திற்கு அடியில் உயர் மின்பாதை கொண்டு செல்ல 20 மடங்கு செலவாகும் என்பது மட்டுமல்ல, நிலத்திற்கு அடியில் அமைத்தால் 50 மீட்டருக்கு ஒரு முறை ஜங்ஷன் பாக்ஸ் போட வேண்டும்.

அதற்கு விவசாய நிலம் அதிகம் தேவைப்படும். எனவே, விவசாயிகள் உழவு உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்ளும் போது விளைநிலங்களை பாதிக்காத வகையில், மின்விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திட்டம், உயர் கோபுரங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.