தமிழகம்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை தி.மு.க. பின்னால் இருந்து இயக்குகிறது – டாக்டர் மு.தம்பிதுரை குற்றச்சாட்டு

திருவள்ளூர்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை தி.மு.க. பின்னால் இருந்து இயக்குகிறது என்று கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 2372 நபர்களுக்கு வேட்டி, சேலை, தையல் இயந்திரம், அயன் பாக்ஸ், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை, ஊரக தொழில்துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்து நமக்கு ஆட்சி அமைத்து கொடுத்துள்ளார். 2014-ம் ஆண்டில் நடைபெற்ற எம்.பி. தேர்தலில் 37 தொகுதிகளில் தனித்து நின்று வெற்றிபெற்ற ஒரே பேரியக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த பெருமை அம்மா அவர்களைத்தான் சாரும். அம்மாவின் ஆட்சியை இன்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது நடப்பது அம்மாவின் ஆட்சி தான். எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக துடிக்கிறார். அவரது ராசிப்படி கண்டிப்பாக முதலமைச்சர் ஆக மாட்டார். எத்தனை தேர்தல் வந்தாலும் இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆட்சியை பிடிக்கும்.

இந்த ஆட்சி இன்று கவிழும், நாளை கவிழும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால் மூன்று நாள் இல்லை மூன்று ஆண்டுகளையும் கடந்து நான்காம் ஆண்டில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். திமுகவினர் சட்டமன்றத்தில் ஏதாவது கலாட்டா செய்து ஆட்சியை கலைக்க நினைத்தனர்.

சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு சைக்கோ போன்று சாலையில் நடந்து சென்றார் ஸ்டாலின். உண்மையிலேயே அவர் ஒரு சைக்கோ தான். அதனால்தான் தனது மகனை வைத்து சைக்கோ என்ற திரைப்படத்தை தயாரித்தார். திமுக என்றாலே அராஜகம். திமுக என்றாலே ரவுடியிசம். அதன் காரணமாகத்தான் மக்கள் அண்ணா திமுகவை ஆதரித்து தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருகிறார்கள்.

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அரசியல் தலைவர்கள் தங்களது பெயருக்கு பின்னால் தங்களுடைய ஜாதி பெயரை வைத்துள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அப்படி ஒரு நிலை இல்லை. ஏனென்றால் இதற்கு காரணம் தந்தை பெரியார் தான். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் பின்னாலிருந்து இயக்குவது திமுக தான். அதற்கு விரைவில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு கழக கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் மு.தம்பிதுரை பேசினார்.