விருதுநகர்

தொண்டர்களை மதிக்கும் இயக்கம் கழகம் – கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் பேச்சு…

விருதுநகர்:-

இந்தியா அரசியல் இயக்கங்களில் கழகத்தில் மட்டுமே உழைக்கின்ற தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது என்று கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் தெரிவித்தார்.

விருதுநகரில் நாடார் சமுதாய அமைப்புகளின் சார்பில் தமிழக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தில் உழைக்கும் தொண்டர்களை உச்சத்தில் வைத்து அழகு பார்த்தார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் படிப்படியாக உழைத்து இந்த இயக்கத்தில் பெரிய பொறுப்புக்கு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இன்றைக்கு முதல்வராக சிறப்பாக பணியாற்றி வரும் முதலமைச்சர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இருந்த இடையூறுகளை அகற்றியுள்ளார்.

சேவை மனப்பான்மையுடன் கல்விச்சாலைகளை நடத்துகின்ற நீங்கள் அமைதியுடனும், நிம்மதியுடனும் உங்கள் பணிகளை செய்ய இந்த அரசு உறுதுணையாக உள்ளது. அதனால் தான் நீங்கள் இன்றைக்கு முதல்வருக்கு பாராட்டு விழாவை நடத்தி, அதில் எங்களைப் போன்றவர்களை பங்கு பெற அழைத்துள்ளீர்கள்.

இந்த ஆட்சியில் கல்வித்துறைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் நமது முதல்வர், துணைமுதல்வர், கல்வி அமைச்சர். அமைச்சர்கள் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்து வருகின்றனர். அதனால் தான் பாரம்பரியப் பெருமை மிக்க இந்த விருதுநகரில் அரசுக்கு பாராட்டு விழாவை நடத்தி வருகிறீர்கள். திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தை வளர்த்த பூமி இந்த விருதுநகர். இங்கு நமது முதல்வருக்கு நீங்கள் நடத்துகின்ற இந்த விழா சுயமரியாதை இயக்க முன்னோடிகளின் ஆன்மா நடத்துகின்ற விழாவாகவே நான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தின் பொற்கால ஆட்சியை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் நடத்தி வருகின்றார்கள்.

2006 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கட்சித் தொண்டன் அப்போதைய ஆட்சியினரால் பாதிக்கப்பட்ட போது அந்த தொண்டனுக்கான வழக்கை நடத்துகின்ற பொறுப்பை இதயதெய்வம் அம்மா அவர்கள் என்னிடம் கொடுத்தார். அந்த வழக்கில் அந்த தொண்டனுக்கு நான் நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக அம்மா அவர்கள் எனக்கு ஒரு பாராட்டுக் கடிதத்தை வழங்கினார். தொண்டனையும் பாதுகாத்து, அந்த தொண்டனுக்காக வழக்காடிய இன்னொரு தொண்டனுக்கும் பாராட்டு வழங்கிப் பாதுகாத்த தலைவி தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

அவரது வழியில் இன்றைக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகின்ற இயக்கம் அண்ணா திமுக மட்டுமே. உழைக்கும் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரம் வழங்குகின்ற இயக்கமும் அ.தி.மு.க தான். இந்த இயக்கம் இன்றைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் சிறப்பான மக்கள் சேவையை ஆற்றி வருகின்றது. இதற்கு பாரம்பரியப் பெருமை மிக்க நீங்கள் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும்”

இவ்வாறு கழக அமைப்புச் செயலாளர் பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் பேசினார்.