சிறப்பு செய்திகள்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு

சென்னை

தமிழக சட்டபேரவையில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி 2020-21-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 20-ந் தேதி வரை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து துறைகள் தோறும் நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக பேரவை மார்ச் 9-ந்தேதி கூடும் என்றும், இதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் மார்ச் 2-ந் தேதி நடைபெறும் என்றும் பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் துறைகள் தோறும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பேரவையில் புதிய திட்டங்கள் அறிவிப்பு, பழைய திட்டங்களை தொடருவது, நிதி ஒதுக்குவது ஆகியவை குறித்து அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி ஆய்வு நடத்தினார். சட்டசபையில் மானிய கோரிக்கை இறுதியில் துறை சார்பில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், ஏற்கனவே கடந்தாண்டில் அறவிக்கப்பட்டு தற்போது வரை செயல் படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் நிலை குறித்தும் அதிகாரிகளுடன் விவாதித்து அவற்றை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பொதுப்பணித்துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது தலைமை செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன், தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் கே.சத்யகோபால், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடிமராமத்து திட்டம், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீடு, அத்திக்கடவு- அவிநாசி திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், காவேரி நதிநீர் இணைப்பு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.