சிறப்பு செய்திகள்

சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை

சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியவை இணைந்து சமூக செயலாற்றுகின்ற பொறுப்பின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 947 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியவை இணைந்து சமூக செயலாற்றுகின்ற பொறுப்பின் கீழ் 40 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 19 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், 24 மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள்களும், 88 பயனாளிகளுக்கு நவீன செயற்கைக்கால் மற்றும் கைகள், 18 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 47 சக்கர நாற்காலிகளும், 138 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளும்,

77 பயனாளிகளுக்கு கால் தாங்கிகளும், 119 பயனாளிகளுக்கு ஊன்றுகோல்களும், 137 பயனாளிகளுக்கு பார்வையற்றோர்கள் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும் கைபேசிகள், 40 பயனாளிகளுக்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும் கைப்பேசிகள், 381 மன வளர்ச்சி குன்றியவர்கள் பயன்படுத்தக் கூடிய உபகரணங்களும், என மொத்தம் 947 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி குழந்தைகள் கடவுளின் குழந்தைகள். இந்த நிகழ்ச்சி எனக்கு மன நிறைவைத் தரக்கூடிய நிகழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு குடிநீர் கேன் வாட்டர் சப்ளை பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை அதனுடைய அடிப்படையிலே மதித்து அதற்கு உட்பட்டவாறு அரசை அணுகுகின்ற பொழுது கண்டிப்பாக வேண்டிய உதவிகளை அரசு செய்யும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு முன்பு இதுபோல பல்வேறு நிகழ்வுகள் வந்துள்ளது.
அப்போது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கண்டிப்பாக கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் சென்னையில் உள்ள மக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க, கண்டிப்பாக சென்னை மெட்ரோ வாட்டர், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேவையான மாற்று வழிகளும் செய்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.