சிறப்பு செய்திகள்

2 ஆயிரத்து 857 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை

2 ஆயிரத்து 857 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது

மாண்புமிகு அம்மா தெய்வத்தை வணங்கி, இந்த இனிய விழாவிற்கு வருகை புரிந்து தலைமையுரை ஆற்றிய மத்திய சுகாதாரம், குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் மற்றும் முன்னிலை உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சேது பாலம்   –  அப்துல் கலாம்

ராமநாதபுரம் மாவட்டம் அழகிய கடற்கரைகள் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள
ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டு மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.ராமபிரானே வழிபட்ட ராமநாத சுவாமி திருக்கோயிலும்,ராமாயண இதிகாசத்தில் ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்ல அமைத்த சேது பாலமும், நமது ஏவுகணை நாயகன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த இடம் ராமேஸ்வரம் ஆகும்.

சேது பாலத்தை சுற்றியிருக்கும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த மன்னர்கள் சேது மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சேது மன்னர்கள் ஆண்ட பகுதி சேது நாடு என்றும், ராம நாடு என்றும் அழைக்கப்பட்டு,
பிற்காலத்தில் ராமநாதபுரம் சீமை என்றும், ராமநாதபுரம் என்றும் அழைக்கப்பட்டது. சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் பாண்டிய மன்னர்களும், சேதுபதி மன்னர்களும் சிறந்து விளங்கினர்.

இம்மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், குட்டங்கள், ஊரணிகள்,
ஏந்தல்கள் போன்ற நீர் சேகரிப்பு அமைப்பினை அனைத்து ஊர்களிலும் ஏற்படுத்தி, வைகை நதியிலிருந்து பெறப்படும் நீரினையும், மழை நீரையும் சேமித்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும்,இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து சமய நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

விவேகானந்தரும் அம்மாவும்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு செல்ல நிதி உதவி அளித்து உதவியவர், ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதி .சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய எழுச்சி மிக்க உரையாற்றிய பின்,இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ராமேஸ்வரம் வழியாக நாடு திரும்பும்போது, அவரது பாதங்கள் முதலில் தன் தலையில் பட வேண்டும் என்று முழங்காலிட்டு மிக்க மரியாதையுடன், அவரை வரவேற்றார் சேதுபதி மன்னர். இவ்வாறு அவர் முழங்காலிட்டு சுவாமி விவேகானந்தரை வரவேற்ற இடம் தான் இன்றும் பாம்பன் அருகே  குந்துக்கல் என்று அழைக்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மா அவர்கள் சுவாமி விவேகானந்தருக்கு அதே இடத்தில் ஒரு முழு உருவச் சிலையுடன் கூடிய
தியான மண்டமும், நூலகமும் அமைத்தார். அவ்விடம், தற்போது ஒரு சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.

இம்மாவட்டத்தில், அதிக அளவிலான மீனவர்களும், மீன்பிடி தொழிலாளர்களும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு,
மீன்பிடி உபதொழில்களும் செய்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கச்சத் தீவினை மீட்க மாண்புமிகு அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தினார்.மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அம்மாவின் அரசும் அந்த சட்டப் போராட்டத்தைதொடர்ந்து நடத்தி வருகிறது.

நீண்ட காலமாக, ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைமையிடம்
மதுரையில் செயல்பட்டு வந்தது. 1985ஆம் ஆண்டு புரட்சித் தலைவர், ராமநாதபுரம் மாவட்டத்தை நிர்வாக நலனுக்காக மூன்றாகப் பிரித்தபோது, ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைமையிடத்தை ராமநாதபுரம் நகருக்கே
மாற்றி உத்தரவிட்டார்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

சத்துணவுத் திட்டம்

சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்ட போது, மாண்புமிகு அம்மா அவர்கள் இம்மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் என்ற ஊரில் தனது தாயார் சந்தியா நினைவாக ஒரு சத்துணவுக் கூடத்தை கட்டிக் கொடுத்தார். இவ்விரு பெருந்தலைவர்களும் இம்மாவட்டத்தை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பது இதன் மூலம் விளங்கும். இவ்விரு பெருந்தலைவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், இந்த மாவட்ட மக்களின் நெடுநாளைய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்று ( நேற்று) புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதை இங்கே மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என்பது அம்மா அவர்களின் கொள்கையாகும். இதன்படி, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகள், 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் துவக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு, மருத்துவம் படிக்க விரும்பும் நம் மாணவர்களின் கனவினை நனவாக்க அம்மாவினுடைய அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கிராமப்புற மாணவர்களின் நலன்

அதிக அளவில் கிராமப் புரங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி, மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என அம்மாவின் அரசு முடிவெடுத்தது.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து, அவசர மற்றும் உயர் மருத்துவ சிகிச்சைகளுக்காக, சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், இம்மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதை நான் பாரதப் பிரதமரை நேரில் சந்திக்கும் போதும், கோரிக்கை மனுக்கள் அளிக்கும் போதும், தனியே கடிதங்கள் வாயிலாகவும் எடுத்துக் கூறியுள்ளேன்.

அதன் பயனாகத்தான், இன்று( நேற்று) , இங்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாகி, இதற்கு, நான் அடிக்கல் நாட்ட வந்துள்ளேன் என்பது, எனக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாகவும், தனிப்பட்ட வெற்றியாகவும் கருதுகிறேன். இத்தருணத்தில், பாரதப் பிரதமருக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

எங்கள் அரசு, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திவந்த காரணத்தினால்தான், குறுகிய காலத்தில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்று, சாதனை படைத்துள்ளது.300 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளை இணைத்து, புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பட்டப் படிப்பு இடங்களுக்கான செலவு 325 கோடி ரூபாயாகும்.

கல்லூரிக்கு தலா 150 மருத்துவ படிப்பு இடங்கள்

இதனை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணாக்கர்களிடையே அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் தேவையை கருத்தில் கொண்டும் அம்மாவின் அரசு கூடுதல் நிதி அளித்து, மருத்துவ படிப்பு இடங்களை கல்லூரிக்கு தலா 150 என உயர்த்தி ஆணையிட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக – ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி துவங்க தலா 20 ஏக்கர் நிலம் கண்டறிந்து, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி, அம்மாவின் அரசு அனுமதி பெற்றது. இந்த 6 இடங்களில் 2021-2022ஆம் கல்வி ஆண்டு முதல், தலா 150 மாணவர் சேர்க்கையுடன், புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கும், இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலரை நியமனம் செய்தும், கட்டடப் பணிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டமாக, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு, கட்டடப் பணிகளுக்காக தேவையான நிதியும் ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.சமீபத்தில், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில், புதியதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க, மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை சுமார் 4,500 முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் அம்மாவின் அரசு அனுமதி பெற்றுள்ளது.
இதற்காக 2020-2021-ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 3,250 மருத்துவ பட்டப் படிப்பு இடங்களுடன், 2021-22ஆம் கல்வி ஆண்டு முதல் 1,650 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்தியாவின் முன்னோடி மாநிலம் தமிழகம்

“”””பிணியின்மை, செல்வம் விளைவின்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து””
என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அதாவது நோயற்ற வாழ்வு, செல்வச் செழிப்பு, நல்ல பயிர் விளைச்சல், இன்பம் நிறைந்த வாழ்வு, பாதுகாப்பு என்ற ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று கூறுகிறார் திருவள்ளுவர். அவர் கூறியது போல் இந்த ஐந்தையும் பெற்று இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்வது நமது தமிழ்நாடாகும்.

“”””தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழல் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்”” – என்றார் மாண்புமிகு அம்மா அவர்கள்.தமிழ்நாட்டு மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்”” என்ற புரட்சித் தலைவரின் எண்ணத்தை ஈடேற்றவும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் குறிக்கோளை அடையவும்,

பெண்களுக்கான திட்டங்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்,அம்மா ஆரோக்கியத் திட்டம்,அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம்,அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்காக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்,விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம்,நடமாடும் மருத்துவமனைத் திட்டம்,தொற்றாநோய் தடுப்பு,
கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம்,தாய்ப்பால் வங்கித் திட்டம்,உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல்,தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை,விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவுதல்,108 அவசர கால ஊர்தி சேவை மற்றும்104 தகவல், ஆலோசனை மற்றும் புகார் உதவி மையம்,102 தாய், சேய் நல ஆம்புலன்ஸ் ஊர்தி சேவை போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுக்காக, 2020-2021-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன், மொத்தம் ஆயிரத்து 634 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர சுகாதாரத் திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர்ப் புரங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 10 மாவட்ட மற்றும் மாவட்ட துணை மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறையின் மூலமாக, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்றா நோய்களின் நோய்த் தடுப்பு மேலாண்மையை வலுப்படுத்தவும், ஏற்றத்தாழ்வின்றி சமமான தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்த உள்ளது.

இதுபோன்று எண்ணற்ற சாதனைகளை சுகாதாரத் துறையில் அம்மாவின் அரசு நிகழ்த்தி வருகிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தது என்ன-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் இந்த மாவட்டத்திற்கு வருகை தந்த போது 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்டேன். அவற்றில்,
ராமநாதபுரம் நகராட்சியை, சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது,ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன், சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் கருவிகள், எக்கோ கார்டியோகிராம் ஆகிய கருவிகள் நிறுவியது, மூப்பியல் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு அமைக்க உபகரணங்கள் வழங்கியது,பரமக்குடி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், டயலாசிஸ் கருவிகள் வழங்கி, அறுவை அரங்கம் அமைத்தது,போன்ற 10 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டும், மீதமுள்ள 14 அறிவிப்புகளின் பணிகள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச்
சொல்ல விரும்புகிறேன்.ர் நிலைகளில் மழை நீர் சேகரிப்பினை அதிகரிக்க குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், நமது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 68 பணிகள் நிறைவேற்றப்பட்டும், 37 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 69 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.

பால் உற்பத்தியைப் பெருக்கி, இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட, விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 1,050 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புர பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், கிராமப்புர பெண்கள் தங்கள் வருவாயினை உயர்த்திக் கொள்ளவும், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 8 ஆயிரத்து 378 பயனாளிகளுக்கு, 33 ஆயிரத்து 512 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

உலக அளவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டு மாணவர்களும் அறிந்து கொள்ள, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பள்ளி, கல்லூரி, பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி பயிலும் இந்த மாவட்ட மாணவ, மாணவியருக்கு 36 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 29 ஆயிரத்து 897 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் 9,302 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களின் மீதும் தீர்வு காணப்பட்டுள்ளது. அதில், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2,101 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மிளகாய் விவசாயிகளின் நலனுக்காக பரமக்குடி மற்றும் முதுகளத்தூரில் சிப்பம் கட்டி, ஏலம் விடும் வசதியுடன் கூடிய முதன்மை மிளகாய் பதப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.128.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் இப்பகுதி மீனவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.டி. மாரியூர், பாம்பன், வேதாளை, முகுந்தராய சத்திரம், தனுஷ்கோடி தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் 44.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு, மீனவர்களின் பயன்பாட்டிற்கு அம்மாவின் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

கமுதியில் 518 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், உட்பட பல்வேறு இடங்களில் பல்நோக்கு பேரிடர் கால மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முதுகுளத்தூரில் ஒரு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு சட்டமன்றத்தில் நான் அறிவித்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலை – பிடாரிச்சேரி உட்பட மூன்று இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.சுமார் 10 கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.நான் இப்போது கூறிய சாதனைகள் குறைவானதுதான்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 2 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உட்பட மொத்தம் 5.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கட்டடங்களை நான் திறந்து வைத்துள்ளேன்.புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது தவிர, திருவாடானை மற்றும் ராஜசிங்கமங்கலம் ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ள புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள் உட்பட 18 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 பணிகளுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.

அதே போல, 21,105 பயனாளிகளுக்கு சுமார் 105 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி ஆற்றின் உபரி நீரை மாயனூர் கதவணையிலிருந்து திருப்பப்பட்டு, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர் வரை – புதிய கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, வைகை ஆறு மற்றும் குண்டாற்றில் இணைக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இம்மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும் இராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் 675 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் திறனுடைய கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டம் மாண்புமிகு அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம், திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 543 குடியிருப்புகள் பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 3.14 லட்சம் மக்கள் பயனடைவர்.அரசின் நிர்வாக ஒப்புதல் 28.7.2015-ல் வழங்கப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

புதிய அறிவிப்புகள்

முதுகுளத்தூர் வட்டாரத்தில், 2 ஊராட்சிகளில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, குளிர் சாதன கிடங்குகள், தலா 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத் தரப்படும்.பரமக்குடியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுப் பேருந்து வழங்கப்படும்.அனைத்து வட்டாரங்களிலும், தலா 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் உலர் களங்கள் அமைத்துத் தரப்படும்.கமுதி மற்றும் சாயல்குடியில் உள்ள பேரூராட்சி வார சந்தைகள் தலா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அபிராமம் பேரூராட்சி வார சந்தை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அபிவிருத்தி செய்யப்படும்.
திருப்புல்லானி ஒன்றியம், செங்கல் நீரோடையில் ஒரு தொடக்கப் பள்ளி துவங்க வேண்டியதன் அவசியத்தைக் கருதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று துவக்கப்படும்.திருவாடானை ஒன்றியம் பாண்டுகுடி, மண்டபம் ஒன்றியத்தில் தங்கச்சிமடம் மற்றும் இருமேனி, போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை,கமுதி ஒன்றியம் பேரையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், மண்டபம் ஒன்றியம் புதுமடத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் கட்டட வசதிகள் செய்து தரப்படும்.பரமக்குடி வட்டம், சத்திரக்குடி மற்றும் மஞ்சூர், கீழக்கரை வட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள், பரமக்குடி அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி, பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் மற்றும் பரமக்குடியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு பேசினார்.