இந்தியா மற்றவை

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து : மாநிலங்களவையில் மசோதா தாக்கல்…

புதுடெல்லி:-

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்க வகை செய்யும் புதிய மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

காஷ்மீரில் பதற்ற நிலை உருவாகி இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். அப்போது உள்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு 370-வது பிரிவு நேரு பிரதமராக இருந்தபோதே கொண்டு வரப்பட்டது.

இப்போது அதை ரத்து செய்வது என நேற்று காலையில் கூடிய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பிரிவை நீக்குவதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளை மத்திய அரசே வகுத்துக் கொள்ள முடியும். அம்மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை மாநில சட்டப்பேரவையே முடிவு செய்ய முடியும்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும். காஷ்மீரில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருப்பவர்கள் சொத்துக்களை வாங்க முடியும். குறிப்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம் காஷ்மீருக்கும் இனி பொருந்தும். எனவே இந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பதற்ற நிலை நிலவுகிறது. அதனால் அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்ரீநகரில் 144-வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் பெண்கள் பிற மாநிலத்தவரை திருமணம் செய்து கொள்ளவும் இந்த சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இப்பிரச்சினை தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்கா காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார். குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சிறப்பு ஆணையும் வெளியிடப்பட்டது.