சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை சேவை விரைவில் தொடங்கும் : துணை முதலமைச்சர் உறுதி

ராமநாதபுரம்,
எய்ம்ஸ் மருத்துவமனை சேவை விரைவில் தொடங்கும் என்று என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது

ராமநாதபுரம் மாவட்டம், தமிழக மாவட்டங்களில் தனி சிறப்பைக் கொண்ட மாவட்டம் ஆகும். வரலாற்றுப் பெருமை உடையதும், ஆன்மீகத் தொடர்பும் கொண்டதுமான, ராமநாதபுரம் மாவட்டம், மதநல்லிணக்கத்தை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டி தமிழகத்திற்குத் தனிப்பெருமை தருகின்ற ஒப்பிலா மாவட்டமாக விளங்குகிறது. அலைகடல் சீராட்டும் ராமநாதபுரம் கடற்கரையில் ஸ்ரீராமபிரானே சிவலிங்கத்தை வடிவமைத்து வணங்கினார் என உள்ளம் உருகும்.

இந்து சமயப் பெருமக்களும், இணை வைக்க முடியாத இறைவனை இதயத்தில் ஏந்தி, இறைதூதர் நபிகள் நாயகம், ஸல் அல்லாஹூ அலைஹி வஸல்லாமை, உயிரென மதிக்கும், இஸ்லாமியப் பெருமக்களும், “ஒரு தாயைப் போல உங்களை நான் தேற்றுவேன்” என்று, நம்பிக்கை மொழியுரைத்த இயேசு பெருமானைத் துதிக்கின்ற, கிறிஸ்துவப் பெருமக்களும் ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளைத் தங்கள் குருவாக எண்ணி வணங்கி வழிபடும், சௌராஷ்ட்ர இன மக்களும், ராமநாதபுரத்தில் “குருத்துவாரா” அமைத்து, குருநானக் தேவ் அவர்களின் வழிநடந்து, வாழும் குருவாக வழிகாட்டி வரும் “குரு கிரந்த சாகிப்” புனித நூலை வணங்கி, வளம் பெற்று வரும் சீக்கியப் பெருமக்களும், மத மாச்சாரியங்களோ, மன வேறுபாடுகளோ, காட்டாமல் பாலோடு கலந்த தேன் போலவும் தேனுக்குள் திளைத்து நிற்கும் தித்திப்பு போலவும் ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டி, மத நல்லிணக்கம் என்றால் இதுதான்.

மனிதாபிமான நெருக்கம் என்றால் இதுதான், மனிதநேயப் பண்பாடு என்றால் இதுதான் என்பதை, அகில இந்தியாவிற்கும் எடுத்துக் காட்டுகின்ற மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம். சேதுபதி மன்னர்கள் ஆண்டதால், சேதுபூமி என்றழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம், பழம் பெருமையும், புதுப் புகழும் ஒருங்கே கொண்டதாகும்.ராமநாதபுரத்தை ஆண்ட புகழ்மிக்க மன்னரான, ஸ்ரீமான் இரண்ய கிரப, இரவிகுல இராஜ, முத்து விஜய இரகுநாத,

ராஜ இரகுநாத தேவ, கிழவன் சேதுபதி, ராமநாதபுரம் சிற்றரசை வளர்த்து ஒரு சக்தி வாய்ந்த ராஜ்ஜியமாக மாற்றினார். ருஷ்டம் கானின் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரைக் காப்பாற்றினார். அதனால், மதுரை சொக்க நாத நாயக்கர், மன்னர் கிழவன் சேதுபதி அவர்களுக்கு “பரஇராஜகேசரி” அதாவது “அயல்நாட்டு அரசர்களுக்கு சிங்கம்” என்று பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

அதுமட்டுமல்ல, சிவகங்கைச் சீமையின் இரண்டாம் மன்னரான முத்து வடுகத் தேவரின் மனைவியான வீர மங்கை வேலு நாச்சியர் பிறந்த இடம் ராமநாதபுரமே. இப்படி வீரத்தின் விளை நிலமாகத் திகழும் ராமநாதபுரம் மாவட்டம், மற்றவர்களை மதித்து, அவர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதிலும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. கிழவன் சேதுபதி காலத்தில் அமைச்சராக இருந்த இஸ்லாமியரான வள்ளல் சீதக்காதிக்கும், இந்து மன்னரான கிழவன் சேதுபதிக்கும் இருந்த நட்பு, இரண்டு மதங்களையும் சேர்ந்த மக்களையும் மத வேறுபாடற்ற, மன ஒற்றுமை கொண்ட மக்களாக இணைத்துள்ளது என்கிறார் சமூக அறிவியல் ஆய்வாளர் பெர்னார்டு டி சாமி.

கிழவன் சேதுபதி மற்றும் வள்ளல் சீதக்காதி இடையிலான நட்பு அவர்களோடு முடிந்துவிடவில்லை, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்ற வித்தியாசம் எதுவுமின்றி, குடும்ப உறவுகளாக ராமநாதபுரம் மக்கள் பழகி வருவதும், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இந்நட்பு தொடர்வதும், இந்த உலகமே எண்ணி வியந்து பின்பற்றத் தக்கதாகும்.

ராமநாதபுரத்திற்கு கிழக்கே, சேதுபதி மன்னரால் கட்டப்பட்டு உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம்,மேற்கே, உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகின் முதல் சிவன் கோயில், தெற்கே திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதப் பெருமாள் ஆலயம், வடக்கே தேவிப்பட்டினத்தில் அமைந்திருக்கும் நவபாஷாணம் என நான்கு திசைகளிலும் அமைந்திருக்கும் இந்து வழிபாட்டுப் புண்ணியத் திருத்தலங்கள்.

அத்துடன், இஸ்லாமியப் பெருமகனாரின் புனித தலங்களான ஏர்வாடி தர்கா, சீனியப்பா தர்கா, கீழக்கரையில் அமைந்துள்ள பழைமையான பள்ளிவாசல் மேலும், கச்சத் தீவில் அமைந்திருக்கும் கிறிஸ்துவ மக்களின் புனித அந்தோணியர் ஆலயம். ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் சீக்கிய குருத்துவாரா ஆகியவை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தன்னிகரில்லாப் பெருமையை தந்து கொண்டிருக்கின்றன.

ராமநாதபுரம் நகரில் அமைந்திருக்கும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராமலிங்க விலாசம் என்னும் அரசவைக் கூடத்தில் தான், பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளை அதிகாரியான ஜாக்சன் துரையை நேருக்கு நேர் எதிர்கொண்டு, உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்து, காரசார விவாதம் மேற் கொண்ட இடமாகும்.

மீன்பிடித் தொழிலில் முதலிடம், குடிசைத் தொழில், பனை மரத் தொழிலில் முதலிடம், உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம்,தமிழ்நாட்டின் மிகப் பெரிய மிளகாய்ச் சந்தை கொண்ட இடம், தேங்காய் மொத்த வணிகத்திற்கு பெயர் பெற்ற இடம்,ஒரே ஊரில் 32 பள்ளிவாசல்களை கொண்ட கீழக்கரை அமைந்த இடம், கடல் நடுவே உலகப் புகழ்மிக்க பாம்பன் பாலமும், ரயில் தூக்குப் பாலமும் அமைந்த இடம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,

வள்ளல் சீதக்காதி, இம்மானுவேல் சேகரன், பாம்பேஹாஜி மஸ்தூன், முன்னாள் இந்தியக் குடியரத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோர் அவதரித்த இடம். இத்தனை பழஞ் சிறப்புகளையும், புதுப் பெருமைகளையும் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, மேலும் ஒரு தனிச் சிறப்பாக இன்றையதினம் புதிய மருத்துவக் கல்லூரியை அமைத்திட முதலமைச்சர் எடப்பாடி கேபழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவத் தரத்தைப் பெற்றிட வேண்டும் என்பதுதான் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு, லட்சியம், குறிக்கோள்! தமிழக மக்களின் நலனை தடையின்றி பேண, அந்தக் குறிக்கோளினை எட்டிடும் வண்ணம் அம்மா அவர்கள் தொலை நோக்குத் திட்டம் 2023-ல் அதனைக் குறிப்பிட்டார். அதற்கேற்ப, கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கென அம்மா அவர்களது அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதிய மருத்துவமனைகள், புதிய மருந்தகங்கள், புதிய ஆரம்பசுகாதார நிலையங்கள், ஆகியவை அதிக எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அனைத்து தரப்பு ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை, உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2011-12 முதல் 10-2-2020 வரை தமிழகத்தில் 33 லட்சத்து 9 ஆயிரத்து 116 பயனாளிகளுக்கு 5 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் பெருமைக்குரிய ஓர் அங்கமாகத்தான் கடந்த 27.1.2019 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி தமிழகத்திற்கு வருகை தந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் யாவும் விரைந்து முடிவுற்று, மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்களுக்கான சேவையை வழங்கத் தொடங்கிவிடும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய சுவடு மறைவதற்குள், தமிழக மக்கள் மீது அளப்பரிய பற்றும் பாசமும் கொண்டுள்ள பாரதப் பிரதமர் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு,அம்மா அவர்களது அரசு மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குவதில் ஆற்றி வரும் சாதனைகளை மனதில் நிறுத்தி,இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத வரப்பிரசாதமாக, வரலாற்றுச் சாதனையாக, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 1100 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பொன்னான வாய்ப்பு கிட்டியுள்ளது. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் 3575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவுவதற்கான அனுமதியினையும் பிரதமர் அம்மா அவர்களது அரசிற்கு வழங்கியுள்ளார். அதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்து அனுமதியை வழங்கிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கும், தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும், அத்துறையின் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், எனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு உறுதுணையாக இருந்த பணியாற்றிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மற்ற அதிகாரிகளையும் மனம் உவந்து பாராட்டுகிறேன்.

இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இம்மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் உடனடியாகத் துவங்கப்பட்டு, புதிய மருத்துவக் கல்லூரி விரைவில் திறக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த அரசு மருத்துவக் கல்லூரியும், அதனுடன் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் பேருதவியாக அமையும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.