தற்போதைய செய்திகள்

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : மத்திய அமைச்சர் பாராட்டு

சென்னை

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதற்காக ராநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இன்று ( நேற்று) இரண்டு புதிய மருத்துவகல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடி தமிழக முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

பிரதமர் கடந்த ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் . தமிழகம் மேலும் வளர்ச்சியடையவும், மாநில மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது . மாநில சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாடு காரணமாக, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவத்தின்போது இறப்பு ஆகியவை வெகுவாக குறைந்துள்ளது,பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளது.

அனைவருக்கும் சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கச் செய்வது ஒவ்வொரு அரசின் கடமையாகும்.தரமான மருத்துவ சிகிச்சை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும் . இந்த உரிமையை மக்களுக்கு வழங்கும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது . உரிய மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது, அதற்கு தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது .