தமிழகம்

சென்னையில் ரூ.4 கோடியில் பத்மாவதி தாயார் கோவில்: அறங்காவலர் குழு ஒப்புதல்

திருப்பதி,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2020 21ம் நிதியாண்டுக்கு ரூ.3,300 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளை போல, திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பட்ஜெட் தொகை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், வரும் 2020 21-ம் நிதியாண்டுக்காக ரூ.3,309.89 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட ரூ.60 கோடி அதிகமாகும். இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.

இந்த பட்ஜெட்டின்படி வரும் நிதியாண்டில், உண்டியல் மூலம் ரூ.1,351 கோடி, பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள வட்டிகள் மூலம் ரூ.706 கோடி, லட்டு பிரசாத விற்பனை மூலம் ரூ.400 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பூந்தி தயாரிக்கும் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை முற்றிலும் தடுக்க பட்ஜெட்டில் ரூ.3.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி உயிரியல் பூங்கா அருகே ரூ.14 கோடியில் ஆகம பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.16 கோடி செலவில் அலிபிரி செர்லோ பள்ளி இடையே சாலையை அகலப் படுத்தி அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்படும். தேவஸ்தான பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிதாக கண்காணிப்பு ஊழியர்கள் நியமனம் மற்றும் கூடுதலாக தேவஸ்தான கோயில்களில் 1,300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் ரூ.3.92 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்படும். மும்பை யில் ஏழுமலையான் கோயில் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். இதேபோல ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.