சிறப்பு செய்திகள்

பதவி பசிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஸ்டாலின்: துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு

விருதுநகர்

பதவி பசிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் ஸ்டாலின் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டி பேசினார்.

விருதுநகரில் நடைபெற்ற புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது.

2006-07 முதல் 2010-11 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு, ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 14,314.55 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு அம்மா அவர்களது அரசால் ஒதுக்கப்பட்ட தொகை, 32,907.51 கோடி ரூபாய்.அது மட்டுமல்ல, மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சியில் 2016-17 முதல் 2019-20 வரையிலான நான்காண்டு காலத்திற்கு ரூ.44,477.99 கோடி அம்மா அவர்களது அரசால் வழங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இந்த நிதியாண்டு, அதாவது 2020-21 ஆம் நிதியாண்டிற்கு 15,863.37 கோடி ரூபாய் நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு திமுக ஒதுக்கிய மொத்த நிதி ஒதுக்கீட்டினைவிட, 1548 கோடி ரூபாய், கூடுதலாக இந்த ஓராண்டில் மட்டுமே நாம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கியுள்ளோம் என்பதைப் பெருமிதத்துடன் தெரிவிக்கிறேன்.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும், அம்மாவின் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான மக்கள் நலப் பணிகளையும், நலத் திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

அம்மாவின் அரசு, இப்படி, மக்களுடைய தேவை என்ன, அதை எப்படியெல்லாம் செய்து முடிக்கலாம், என்று ஒவ்வொரு கணமும் சிந்தித்து செயலாற்றி, சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.இந்த சாதனைகள், இதற்கு முன்னர் ஆண்ட திமுக ஆட்சியால் எண்ணிப் பார்க்கவும் முடிந்திராத சாதனைகள், வேறு எந்த மாநிலமும் கூட செய்திராத சாதனைகள் என்பதையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டு நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினுக்குத்தான் இதைப் பாராட்ட மனம் வரவில்லை. பாராட்டக் கூட வேண்டாம், ஏற்றுக் கொள்ளக் கூட அவரால் முடியவில்லை. இந்தத் திட்டங்களை எப்படியெல்லாம் குறை சொல்லலாம், இந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த, யாரைத் தூண்டிவிடலாம், தன்னுடைய பதவிப் பசிக்காக யாரை இரையாக்கலாம் என்ற, சுயநலச் சிந்தனையோடு, மக்கள் நலனைப் பற்றிய கவலை ஒரு சிறிதும் இன்றி, மக்கள் நல விரோதியாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.மு.க.ஸ்டாலின் இப்படியெல்லாம் செயல்படுவதற்கு ஒரே அடிப்படைக் காரணம், எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு அவர் தயாராகி விட்டார்.
அவரது சுயநல சிந்தனைக்கு மருந்தாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாடிய பாடலையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“”””மண்வெட்டி கையில் எடுப்பார் – சிலபேர்
மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்””
என்னும் பாடலின் பொருளினை உணர்ந்து ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் தமிழக மக்கள் அவரை மாற்றுவார்கள் .இவ்வாறு பேசினார்.