சிறப்பு செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

விருதுநகர்

இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை கைவிட்டு  ,அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது.

அச்ச உணர்வு

இன்றையதினம் சிறுபான்மை மக்களுக்கு சிலர் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். இன்றைக்கு அம்மாவுடைய அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு என்.பி.ஆர்., தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதாவது சென்செஸ். இதனை கணக்கெடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் இந்த என்.பி.ஆர்.ல் பல்வேறு சந்தேகங்கள் சிறுபான்மை மக்களுக்கு இருந்து கொண்டு இருக்கின்றன. அந்த என்.பி.ஆர்.ல் தான் 2011-ல் திமுக ஆட்சியிலே முதல்முதலாக கணக்கெடுக்கப்பட்டது. அந்த 2011 -ல் கணக்கெடுக்கப்பட்ட அந்த பட்டியலிலே இப்பொழுது மூன்று கேள்விகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று எந்த மொழி பேசுகிறீர்கள் என்று, இரண்டாவது தாய் தந்தையர் பிறந்த இடம், மூன்றாவது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை குறித்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது.

ஆனால் மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது, இவை இருந்தால் வழங்கலாம். இல்லாவிட்டால் வழங்க தேவையில்லை என்று. இந்த மூன்றும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லலாம், இல்லாவிட்டால் தேவையில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டது.

அச்சம் தேவையில்லை

ஆகவே, சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையே இல்லை. வேண்டுமென்றே சில எதிர்க்கட்சியினர் தூண்டிவிட்டு சிறுபான்மை மக்களை குழப்பி, பொய்யான செய்தியை, அவதூறான செய்தியை நாள்தோறும் சொல்லி, சொல்லி அவர்களது மனதில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திவிட்டார்கள்.

நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சொல்லி கொள்கிறோம். சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை. எந்தவிதத்திலும் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு சிறுபான்மை மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இந்த அரசு தருகிறது. அமைதியான மாநிலம் தமிழ்நாடு.

அமைதிப் பூங்காவாக தமிழகம்

அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கி இன்றைக்கு அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. அதற்கு நீங்கள் துணை போக வேண்டாம் என்று சிறுபான்மை மக்களை தாழ்மையோடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, வண்ணாரப்பேட்டையில் இருந்து இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளும் என்னை வந்து சந்தித்தார்கள். அதேபோல பல்வேறு மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்தார்கள். ஒரு அச்ச உணர்வை தெரிவித்தார்கள்.

நான் அவர்களிடத்திலே தெளிவாக சொன்னேன். தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு இஸ்லாமியரும் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெளிவாக சொன்னேன். ஆகவே நீங்கள் அச்சப்பட வேண்டியதே இல்லை.

தெளிவுபடுத்தி விட்டோம்

நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா மாநிலம், தெலுங்கானா மாநிலம், போன்ற மாநிலங்களிலேயே எப்படி என்.பி.ஆர். எடுக்கின்றார்களோ, அதையே நாங்கள் கடைப்பிடிப்போம் என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். மத்திய அரசும் தெளிவுப்படுத்தி விட்டது. என்.பி.ஆர். எடுக்கின்றபோது நீங்கள் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விரும்பினால் சொல்லலாம்,
விருப்பம் இல்லாவிட்டால் அந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று தெரிவித்து விட்டார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே திரும்ப திரும்ப இஸ்லாமிய மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி, இன்றைக்கு அவர்களுக்கு ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.

போராட்டத்தை கைவிடுங்கள்

சிறுபான்மை மக்களை நாங்கள் கேட்டுக் கொள்வது எல்லாம், எங்களுடைய அரசு, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்திலும் சரி, எங்களது ஆட்சி காலத்திலும் சரி, நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம். உங்களுக்கு அரணாக இருப்போம். உங்கள் பாதுகாவலராக இருப்போம். ஆகவே, சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் இயல்பு வாழ்க்கை வாழுங்கள்.

இஸ்லாமிய பெண்கள் இரவு நேரங்களில் கூட சாலையிலே அமர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து, அன்புகூர்ந்து நான் கேட்டுக் கொள்வது எல்லாம், அதை தவிர்த்து விட்டு, அரசிற்கு ஒத்துழைப்பு நல்குங்கள்.

நீங்கள் எண்ணுகின்றபடி இந்த அரசாங்கம் உங்களுக்கு ஒத்துழைக்கும்.அதேபோல என்.ஆர்.சி. பற்றி மத்திய அரசு கேட்கவில்லை. அதைப்பற்றி நமக்கு தேவையில்லை.இவ்வாறு பேசினார்.