சிறப்பு செய்திகள்

ஸ்டாலினுக்கு மண் வாசனை தெரியுமா? முதல்வர் கிடுக்கிப்பிடி கேள்வி

மதுரை

ஸ்டாலினுக்கு மண் வாசனை தெரியுமா என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலே பங்கு பெற்று வந்திருக்கின்றேன். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி துவக்க அனுமதி வழங்கிய பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடிஜி அவர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை …?

பதில்: எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும். அதற்குண்டான பூர்வாங்கப் பணிகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் , விரைவாக அந்தப் பணி துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துறையை பற்றி தெரியாத கமல்

கேள்வி: நடிகர் கமலஹாசன், அரசு பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது, இது புரட்சிகரமான திட்டம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருக்கிறாரே?

பதில்: அவருக்கு என்ன தெரியும்? துறையைப் பற்றி என்ன தெரியும்? சினிமாவைப் பற்றி தெரியும், துறையைப் பற்றி சொல்லுங்கள் பார்க்கலாம், என்ன துறையில் என்ன இருக்கிறது என்று அவரை கேளுங்களேன். அவருக்கு எந்தத் துறையைப் பற்றியும் தெரியாது. பொத்தாம்பொதுவாக யாராவது எழுதிக் கொடுக்கிறார்கள், அதை வாங்கிப் படித்து சொல்கிறார். இன்றைக்கு துறை வாரியாக தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம், இது அவருக்குத் தெரியுமா? இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் அதிக அளவில் தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அவருக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் சொன்னாரே முழுநேர அரசியல்வாதி அல்ல என்று, அதை தெளிவுபடுத்தி விட்டார், அவரைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?

மண்வாசனை தெரியுமா?

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீங்கள் விவசாயி, விவசாய குடும்பம் என்று சொல்கிறீர்கள், விவசாய மண்ணின் வாசனை கூட துண்டில் படவில்லை என்று மதுரையில் பேசியிருக்கிறாரே?

பதில்: அவருக்கு மண்வாசனை என்றால் என்னவென்றே தெரியாது, தெரியாதவரிடம் பேசி என்ன செய்வது? எங்களுக்கு நிறைய உவமை தெரியும், நான் கிராமத்தில் பிறந்து வந்தவன். எப்பொழுதும் என் பெயரில் வேறு எந்தத் தொழிலும் இதுவரை செய்யவில்லை, விவசாயம் தான். விவசாயத்தைத் தான் வருமானமாக காட்டிக் கொண்டிருக்கிறேன், என் சம்பளத்தைக் காட்டியிருக்கிறேன், இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்? எம்ஏல்ஏ ஆன பிறகு, எம்ஏல்ஏ சம்பளம், ஏம்ஏல்ஏவாக இல்லாதபோது அதனுடைய பென்ஷன், அதுபோல் எம்பிஆக இருக்கும்போது, எம்பி சம்பளம், எம்பிஆக இல்லாதபோது, அதனுடைய பென்ஷன், இதைத்தான் நான் காட்டிக் கொண்டிருக்கிறேன். வேறு எந்த வருமானத்தையும் காட்டவில்லை. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், நான் விவசாயி என்று.

கேள்வி: ஸ்டாலின் மதுரை பொதுக் கூட்டத்திற்கு வந்தபொழுது, ஒரு குரங்குக் கதையைச் சொல்லி, அதிமுக-வை விமர்சனம் செய்துள்ளாரே?

பதில்: அவரைத்தான் போய் கேட்க வேண்டும்.

போராட்டம் குறித்த விளக்கம்

கேள்வி: இஸ்லாமியர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, அதற்கான முடிவு …

பதில்: நான் தெளிவாக சட்டமன்றத்திலே தெரிவித்தேன், வருவாய்த் துறை அமைச்சர் சகோதரர் உதயகுமார் அவர்களும் தெளிவுபடுத்தினார். ஏற்கனவே 2003-ல் இந்த என்பிஆர் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அப்பொழுது மத்தியிலே ஆட்சியில் இருந்தது பாரதீய ஜனதா ஆட்சி, அப்பொழுது மத்திய ஆட்சியிலே பங்கு பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்குப் பிறகு 2010-ல் இந்தியா முழுவதும் என்பிஆர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.

2011-ல் தமிழகத்தில் முதன் முதலாக அதை நடைமுறைப்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இப்பொழுது மத்திய அரசாங்கம், மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு என்பிஆர்-ஐயும் எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். 2011-ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் என்பிஆர் கணக்கெடுக்கப்பட்டதுடன் தற்பொழுது, அதோடு மூன்று அம்சங்கள் சேர்த்துள்ளார்கள்.

ஒன்று என்ன மொழி, இரண்டாவது அவருடைய தாய், தந்தையர் பிறந்த இடத்தைக் கேட்டிருக்கிறார்கள், மூன்றாவது ஆதார் எண், குடும்ப அட்டை விவரம், வாக்காளர் அடையாள அட்டை இதனுடைய ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும், விருப்பப்பட்டால் கொடுக்கலாம், தெரிந்தால் சொல்லலாம், இது கட்டாயம் அல்ல, எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை என்று மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார், அதை நாங்களும் தெளிவுபடுத்தி விட்டோம்.
அது மட்டுமல்ல, அருகாமையில் இருக்கின்ற ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலம் எப்படி இதை நடைமுறைப்படுத்துகின்றதோ அதே நடைமுறையை தமிழ்நாடு அரசும் பின்பற்றும்.

கேள்வி: குடிமராமத்து நாயகன் விருது எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள், ஆனால் இப்பொழுது குளத்தில் மண் அள்ளுவதை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்…

பதில்: அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை. அது எந்த முறையில் நடந்தது என்று விசாரித்து தான் சொல்ல முடியும். அதற்காக நடந்ததா? அல்லது சொந்த பகையின் காரணமாக நடந்ததா என்பதெல்லாம் போலீஸ் விசாரணையில் தான் தெரியும். ஒருவரை வெட்டியவுடன் இதுதான் நடந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணையின் அடிப்படையில் தான் அதை தெளிவுபடுத்த முடியும்.

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள்

கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக-வில் இணைந்திருக்கிறாரே?

பதில்: அவர் எத்தனை கட்சிகளுக்கு போய்விட்டு வந்திருக்கிறார், எந்தக் கட்சியில் நிலையாக இருந்திருக்கிறார்? அதிமுக கட்சி, விலாசம் கொடுத்த கட்சி, அந்த விலாசம் கொடுத்த கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும், அவர் விலாசமில்லாமல் போய்விடுவார்.

கேள்வி: பனை மரம் ஏறுபவர்களுக்கு வாரியம் அமைக்கப்படுமா?

பதில்: ஏற்கனவே பனை வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அம்மா இருக்கும் பொழுது பனை வாரியத் தலைவராக முன்னாள் எம்.பி. பெருமாள் இருந்தார்.

கேள்வி: ஆசிரியர் தேர்வாணையத்தில் உள்ள முறைகேடுகளை ஆதாரபூர்வமாக கொடுத்திருக்கிறார்கள், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து …?

பதில்: எதில் முறைகேடு நடைபெற்றிருந்தாலும், அதை உரிய முறையிலே விசாரித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மாற்றுக் கருத்தே கிடையாது. எந்தத் துறையில் தவறு செய்திருந்தாலும், அந்தத் துறையில் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

நாட்டு மக்களிடையே வரவேற்பு

கேள்வி: கிராமங்களில் இணையதள வசதி கொடுப்பதற்கு 2015-ல் ஒப்பந்தம் போடப்பட்டது, அது முறைகேடு நடந்ததால் தான் சந்தோஷ்பாபு என்ற செயலாளர் விருப்ப ஓய்வு பெற்றதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

பதில்: விருப்ப ஓய்வு பெறவில்லையே, பணியில் இருக்கிறாரே. நான்கு நாட்களுக்கு முன் கூட என் பக்கத்தில் வந்து வீடியோ கான்பிரன்ஸில் பங்கு பெற்றார். எனவே, இது தவறான செய்தி. விருப்ப ஓய்வு பெற்றிருந்தால், வெளியில் போயிருப்பாரே, எப்படி நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்களுடன் பங்கு பெறுவார்? இன்னும் அந்த டெண்டரே விடவில்லை. நடைமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது, நடைமுறைப் பின்பற்றித் தான் ஒப்பந்தம் விடுவார்கள்.

நாட்டு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு வந்துவிடும் என்ற நோக்கத்தில், வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான செய்தியை, எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கிறது. இது மிகப் பெரிய திட்டம், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகின்றபொழுது, அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி செய்து கொடுக்கப்படும்.

அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்களிடத்திலே மிகப் பெரிய வரவேற்பு அரசிற்கு கிடைத்துவிடும், அந்த நல்ல திட்டம் வந்துவிடக் கூடாது, அதில் ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்து அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டுமென்ற அடிப்படையில், இதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், இது உண்மையல்ல.

விரைவில் சேவை

கேள்வி: மதுரையில் பாரதப் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவனையின் பணிகள் முடங்கிக் கிடக்கிறது என்று திமுக-வினர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்களே?

பதில்: இன்றைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார், jica பற்றி நான் கேட்டேன். jica கடனுதவி பெற்றுத்தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது, அதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். டெல்லியில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் இருக்கின்றதோ அதற்கு இணையாக மதுரையில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற செய்தியையும் சொல்லியிருக்கிறார்.

கேள்வி: இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜினியை சந்தித்திருக்கிறார்கள்…

பதில்: அதைப்பற்றி எனக்குத் தெரியாது, அது தனிப்பட்ட விஷயம்.

தலைமைக்கழக முடிவு

கேள்வி: தேமுதிக.வுக்கு மேலவை உறுப்பினர் பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறதே?

பதில்: ஒவ்வொருவருக்கும் கேட்பதற்கு உரிமையுண்டு. ஒரு கூட்டணியில் இருக்கின்றபொழுது, எல்லோரும் அந்தக் கட்சி வளர வேண்டும், அதிலிருக்கின்ற ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தின் அடிப்படையில் அவர்கள் கேட்கின்றார்கள். எங்களுடைய தலைமைக் கழகம் கூடி தான் இறுதி முடிவெடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.