தற்போதைய செய்திகள்

வேளாண் மண்டல அறிவிப்பால் தி.மு.க.வுக்கு தேர்தல் தோல்வி பயம் – அமைச்சர் நிலோபர்கபீல் பேச்சு

வேலூர்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பால் தி.மு.க.வுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்று அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.

வாணியம்பாடி தொகுதி வள்ளிப்பட்டு கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் கோவி.சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர்கபீல், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் நிலோபர்கபீல் பேசியதாவது:-

கழகம் என்ற பேரியக்கம் தான் மக்களுக்காக என்றுமே பணிசெய்யும் உண்மையான இயக்கம். மக்களுக்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா. பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை அவர் கொண்டு வந்தார். அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறிய போது திமுக தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

அம்மாவின் ஆட்சியில் தான் இஸ்லாமிய மக்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு துரோகங்களை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு என்றும் பாதுகாப்பு அளிக்கின்ற அம்மாவின் அரசுக்குத் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகின்ற தேர்தலில் அனைவரும் கழகம் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் 100 சதவீதம் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர்கபீல் பேசினார்.

கூட்டத்தில் கழக மாணவரணி துணை செயலாளர் மணிமாறன், நகர கழக செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், பேரூராட்சி செயலாளர் டி.பாண்டியன், அண்ணாசாமி மாவட்ட அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் மகேந்திரன், ஜெய்சக்தி, கே.பி.மணி, பலராமன், ஊராட்சி செயலாளர் கிரி, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பிரபாகரன், லட்சுமிகாந்தன் ,முன்னாள் ஊராட்சி தலைவர் கோவி.ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.