விருதுநகர்

விருதுநகரில் முதலமைச்சருக்கு கல்லூரி மாணவிகள் உற்சாக வரவேற்பு

விருதுநகர்

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த முதல்வர் மற்றும் துணைமுதல்வருக்கு விருதுநகர் மாவட்ட நாடார் சமுதாய கல்வி நிறுவனங்களின் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆரவாரத்துடன் பங்கேற்று இரட்டை விரலைக் காட்டி முதல்வர், துணை முதல்வரை கரகோஷத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட்ட போதே இம்மாவட்ட மக்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். பெருந்தலைவர் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாடார் சமுதாயக் கல்வி நிறுவனங்களின் சார்பில் நேற்று அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகை தந்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எச்.பி.மனோஜ்பாண்டியன் ஆகியோர் தலைமையில், நாடார் மஹாஜன சங்கத்தலைவர் ஜி.கரிக்கோல்ராஜ், மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் விருதுநகர் எஸ்.எஸ்.கதிரவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த மாபெரும் வரவேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு 5000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பூக்களைத் தூவி உற்சாகமான வரவேற்பை அளித்தனர். மாணவிகள் மத்தியில் பேசிய முதல்வரை கண்டதும் இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் இரண்டு விரல்களைக் காட்டி மாணவிகள் உற்சாகமாக வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வருக்கு நாடார் சமுதாயக் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆளுயர ரோஜா மாலையை மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன் அணிவித்தார். இவ்விழாவில் விருதுநகர் குளோபல் நிறுவனத்தின் தலைவர் டி.முரளிதரன், செந்திக்குமாரநாடார் கல்லூரி செயலர் ஜெயகுமார், வி.வி.வன்னியப்பெருமாள் கல்லூரியின் செயலாளர் ரவிசேகர், காமராஜ் பொறியியல் கல்லூரியின் செயலாளர் எஸ்.பி.ஜி.சி.முருகன், கே.வி.எஸ்.பள்ளிகளின் செயலர் சபரிமுத்து, ஷத்திரிய மகளிர் பள்ளிகளின் செயலாளர் தனிக்கோடி, எஸ்.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கின் சேர்மன் நாராயணமூர்த்தி, விருதுநகர் தொழிலதிபர்கள் குமரகுரு, சி.சண்முகப்பிரியா, எம்.ராதாகிருஷ்ணன், ராமமூர்த்தி, ஆனந்தவேல். கோவிந்தராஜன், செங்குட்டுவன், மாணிக்கவேல் இந்து நாடார்கள் தேவஸ்தானச் செயலாளர் பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் விருதுநகர் எஸ்.எஸ்.கதிரவனை தமிழக முதல்வர் கைகுலுக்கி பாராட்டுத் தெரிவித்தார்.