சென்னை

அரசியலுக்கு வரும் நடிகர்கள் முதலமைச்சராக நினைப்பதா? ஆர்.சுந்தரராஜன் கடும் தாக்கு

சென்னை

இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் சிலர் உடனே முதலமைச்சராகி விடலாம் என நினைப்பதா என்று இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதி 96-வது வட்டம் அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் அருகே வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஜி.ஆர்.பி.கோகுல் தலைமையிலும், வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு முன்னிலையிலும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக மருத்துவரணி செயலாளர் பி.வேணுகோபால், தலைமை கழக பேச்சாளரும், நடிகரும், இயக்குனருமான ஆர். சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி மா.இராசு, கொளத்தூர் கே.கணேஷ், திருமங்கலம் கே.மோகன், வில்லிவாக்கம் ஆர்.மகேஷ், புரசை சேகர், முனிரத்தினம், வில்லிவாக்கம் ஜி.வேணு, சிக்மா சத்தியநாராயணன், பீட்டர், துளசிதாஸ், நவீன் அன்பரசு, வழக்கறிஞர் கோவிந்த், ஆட்டோ ராஜேந்திரன், இரா.ரவி, ஐ.சி.எப்.சுந்தர், ஆசீர் மற்றும் மாவட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளரும், நடிகரும், இயக்குனருமான ஆர்.சுந்தரராஜன் பேசியதாவது:-

நேற்று நான் ஒரு இடத்தில் பேசும் போது எம்.ஜி.ஆரை போல ஒருவரும் வர முடியது என கூறிவிட்டு வந்தேன். அதே நேரம் தி.மு.க பற்றி சில விமர்சனங்களை வைத்தேன். அன்று மாலையே நான் இறந்து விட்டதாக செய்தியை பரப்புகிறார்கள். நடிகர்கள் சில பேர் இப்போது அரசியலில் வந்து உடனடியாக முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் எந்த படத்திலாவது வில்லன்களை கொல்வது போல் நடித்ததை பார்த்திருப்பீர்களா? இருக்காது. அவர்களை திருத்தி படத்தின் முடிவில் அவர்களை போலீசில் ஒப்படைத்து விடுவார். அதுவே அவரது இயல்பான குணமே.

அதேபோல பெண்களையும் காப்பாற்றுவது போன்று நடித்து இருப்பார். இவை இரண்டும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் எம்.ஜி.ஆரை மக்கள் ஏற்றுக் கொண்டனர். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஒரு தடவை வெளியூர் சென்ற போது ரயில்வே கிராசிங்கில் ரயில் சென்றவுடன் செல்லலாம் என காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு வயதான பெண் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அருகில் வந்து எனக்கு கண்ணு தெரியாது. பசியாக இருக்கிறது என்று சொன்னார். உடனே எஸ்.எஸ்.ராஜேந்திரன், அந்த வயதான பெண்ணிடம் அம்மா வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி நூறு ரூபாய் கொடுத்தார். அப்போது அந்த வயதான பெண் எஸ்.எஸ்.ராஜேந்திரனை பார்த்து நூறு ரூபாய் தருகிறீர்களே. நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா என்று கேட்கிறார். அப்படி எம்.ஜி.ஆரின் பெயர் புகழ் நிலைத்து நிற்கிறது. ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் பணம் பொருள் கொடுத்து உதவியதே அதற்கு காரணமாக அமைந்திருந்தது.

இவ்வாறு ஆர்.சுந்தரராஜன் பேசினார்.