தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா வழியில் எடப்பாடியார் நல்லாட்சி நடத்துகிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாட்சி நடத்துகிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மாபேட்டை ஒன்றியக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நெரிஞ்சிப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் சரவணபவா தலைமை வகித்தார். அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜா கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் என்.ஆர்.கோவிந்தராஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் சிறப்புரை யாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி மக்கள் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தனர். அம்மாவின் வழியில் மக்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிறார். விவசாயிகள் நலன் காக்க காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?

பவானி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டம், பவானி பகுதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் கரூரில் இருந்து செயல்பட உள்ளது. இதற்காக 700 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு பட்ஜெட்டில் முதல்கட்டமாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் அதன் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காது.

திமுக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். அம்மா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. 2 ஏக்கர் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றினர். ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் நோன்பு கஞ்சி வழங்க விலையில்லா அரிசி வழங்கியவர் அம்மா. உலமாக்களுக்கு ரூ.1500 ஓய்வூதியம் வழங்கியவர் அம்மா. அம்மாவின் வழியில் உலமாக்களுக்கு ரூ.3000 ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

சிறுபான்மையினரின் நலன் காக்கும் அரசு அம்மா அரசு. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கி செல்வதற்காக ெசன்னையில் ஹஜ் இல்லம் கட்ட ரூ 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறுபான்மையினருக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சி அம்மாவின் வழியில் செயல்படும் கழக அரசு.எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி காலம் உள்ளவரை முதலமைச்சராக இருந்தார்களோ அதே போல் எடப்பாடி கே.பழனிசாமியும் அவர் காலம் உள்ளவரை முதலமைச்சராக இருப்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இக்கூட்டத்தில் அம்மாப்பேட்டை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராதா, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி கழக செயலாளர் மாரியப்பன், அரசு வழக்கறிஞர் எம்.அருள் முருகன், பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, குருவ ரெட்டியூர் கே.சுப்பிரமணியம், சின்னத்தம்பி, முத்து, பங்க் பாலு, சரவணன், பட்லூர் தொடக்க வேளாண்மை சங்க தலைவர் சசி (எ) இளங்கோ, ஊராட்சி தலைவர் சக்திவேல், முகாசி புதூர் ஊராட்சி செயலாளர் முத்துவேல், எம்.பி.வெங்கடாசலம், கேபிள் செல்வராஜ், பி.ஜி.முனியப்பன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பி.ஜானகி, ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்க்கொடி நித்தியானந்தம், மணிசந்தோஷ் பரமசிவம், ஈஞ்சரம் சேகர், எம்.எம்.சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.