தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை

காஞ்சிபுரம்

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 3 லட்சமாக அதிகரிக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலைய வளாகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழக செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள் மற்றும் இலவச வேட்டி, சேலைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் காஞ்சிபுரத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி வசதியுடன் மாவட்ட விளையாட்டு அரங்கம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.14.66 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் திறந்து வைக்க இருக்கிறார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உள்ளது. அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3 லட்சமாக உயரும். தனியார் பள்ளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சி அமைந்திருக்கிறது” என்றார்.