சிறப்பு செய்திகள்

ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவரை மக்கள் மாற்றுவார்கள் – விருதுநகர் விழாவில் துணை முதலமைச்சர் பேச்சு

விருதுநகர்

பதவி பசிக்காக யாரை இரைக்கலாம் என செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்கள் அவரை மாற்றுவார்கள் என்று விருதுநகர் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டம், தொட்டதெல்லாம் துலங்கச் செய்யும் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆரின் பொற்கரங்களால் துவக்கி வைக்கப்பட்ட மாவட்டம். புரட்சித்தலைவரை தொடர்ந்து, கண் பட்டதெல்லாம் விளங்கச் செய்யும் முகராசி, எங்கள் மகராசி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால், தனது இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டு, எண்ணிலாத் திட்டங்களும் அதற்குத் தேவையான நிதியும் வழங்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மாவட்டம், விருதுநகர் மாவட்டம்.

1985-ம் ஆண்டு, மார்ச் திங்கள் 15-ம் நாளுக்கு முன்னர், ராமநாதபுரத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த காரணத்தால் ராமநாதபுரத்தின் பொதுவான பெருமைகள் விருதுநகர் மாவட்டத்திற்கும் பொருத்தமானவையாகவே அமையும். என்றாலும், தனக்கென தனி மாவட்ட ஆட்சித்தலைவர், தனக்கென தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தனக்கென தனி மாவட்ட எல்லைக் கோடு என்று தனி மாவட்டமாக பிரிந்த பின்னர், முன்னர் இருந்த ஒருங்கிணைந்த பெருமைகளோடு, தனக்கென தனிச் சிறப்புகளையும் நிறைவாகக் கொண்டு, மாவட்ட மக்கள் மனம் நிறைந்து மகிழச் செய்த மாவட்டம் விருதுநகர் மாவட்டம்.

விருதுநகர் மாவட்டத்தின் பெருமைகளைச் சொல்லி மாளாது. சொல்ல நேரமும் போதாது. வேதாந்த நெறியைப் போதித்த ஆன்மீகப் பெரியவர் ரமண மகரிஷி அவதரித்த மாவட்டம். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராசர் இப்பூவுலகிற்குத் தந்த மாவட்டம். அதற்கு முன்பாக, சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசுவாமி ராஜா பிறந்த மாவட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில், சித்தர் பூமி என்று அழைக்கப்படும் சதுரகிரி மலை சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில், இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் என எண்ணற்ற இந்து ஆன்மீகத் திருக்கோயில் களையும், தூய இன்னாசியார் தேவாலயம், பாண்டியன் நகர் தூய சவேரியார் தேவாலயம் ஆகிய புனித தேவாலயங் களையும், பெரிய பள்ளிவாசல், கல் பள்ளிவாசல் உட்பட பல்வேறு சிறப்பு மிக்க பள்ளிவாசல்களையும் கொண்ட மாவட்டம், விருதுநகர் மாவட்டம்.

பொதுவாக ஒரு மாவட்டம் என்றால் அதற்கு ஒரு தலைநகர் இருக்கும். அந்த தலைநகருக்கு ஒரு தனிச் சிறப்பிருக்கும். அதோடு, மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சில முக்கிய நகரங்களும் இருக்கும். ஆனால், இருக்கும் ஊர்கள் எல்லாமே, தனிச் சிறப்பு கொண்டவையாக, தனிப் பெருமை உடையனவாக இருக்கின்ற ஒரே மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகும்.

* உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத் தோட்ட விளைபொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறும் விருதுநகர்.

* பட்டாசு உற்பத்தியால் உலகப் புகழ் பெற்ற ‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசி.

* மதுரையின் பேரரசி ராணி மங்கம்மாவால் பாலமும், விநாயகப் பெருமான் திருக்கோயிலும், அத்துடன் பயணிகள் தங்கிட சத்திரமும் கட்டித் தரப்பட்ட, காரச் சேவுக்குப் பெயர் பெற்ற, சாத்தூர்.

* மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண்ணெய் முதலியவற்றின் மொத்த வியாபார மையமாக விளங்கும் அருப்புக் கோட்டை.

* பருத்தியும் வேர்க்கடலையும் முக்கியப் பயிர்களாக விளைவிக்கும் ஆத்துப்பட்டி.

* பருத்தி அரைக்கும் ஆலைகள் கொண்ட பந்தல்குடி.

* உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அவுரிச்செடி நிறைந்து விளையும் ஆமணக்க நத்தம்.

* பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகும் தறி நெசவுத் துணிகள் நெய்யும் குல்லூர்சந்தை.

* பல வகை தானிய வேளாண்மையில் சிறந்து விளங்கும் கஞ்ச நாயக்கன் பட்டி.

* தமிழகத்தின் பல ஊர்களுக்கும் மல்லிகைப்பூ அனுப்பி வைக்கும் பாளையப்பட்டி.

* மயில்கள் நிறைந்து நடனமாகும் அழகிய நல்லூர்.

* நாடகக் கலை வளர்ச்சிக்கு முக்கிய இடமாய்த் திகழ்ந்து, இன்று எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பதில் பெயர் பெற்று விளங்கும் மல்லாங்கிணறு.

* பூமியில் புதைந்து காணப்படும் சிவன் கோயிலும், அதனருகில், பாண்டியன் கிணறு என்று அழைக்கப்படும் ஐந்து பெருங்கிணறுகளும் கொண்ட வரலொட்டி.

* ரமண மகரிஷியை ஈன்றெடுத்த திருச்சுழி.

* காட்டு மயில்கள் பறந்து வந்து உணவு உண்டு செல்லும் பள்ளிவாசல் அமைந்திருக்கும் வீர சோழம்.

* மருது பாண்டியரின் புகழ் கூறும் நரிக்குடி.

* விநாயகப் பெருமானை வேண்டி, அவரது உருவத்தை பூமியில் புதைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளும்
பிள்ளையார் தொட்டியங்குளம்.

* ஆண்டு முழுவதும் தண்ணீர் பாயும் அழகுமிகு அருவி அமைந்த அய்யனார் கோயில்.

இன்னும், புனல்வேலி வற்றிராயிருப்பு தளவாய்புரம், பண்ணை மூன்றடைப்பு, காட்டுக் காளையார் கோயில் என, ஒவ்வொரு ஊரும் ஒரு தனிச் சிறப்புடன் திகழ்வது விருதுநகர் மாவட்டத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டு, விரைவில் தொடங்கப்படவிருக்கிற புதிய மருத்துவக் கல்லூரி இம்மாவட்டத்தின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கவிருக்கிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சரித்திர சாதனையாக, வரலாற்றுப் புரட்சியாக, நம் இதயத்தில் எந்நாளும் கொலுவிருக்கும் அம்மா அவர்களது ஆட்சி வீறு நடைபோட்டு வரும் தமிழகத்திற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி , ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை துவக்க அனுமதி அளித்திருக்கிறார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் 3575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இவ்வாண்டே நிறுவிடுவதற்கான அனுமதியினையும் அவர் வழங்கியுள்ளார்.
இத்தகைய அருஞ்சாதனைகளுக்காக பாரதப் பிரதமருக்கும், மோடிஜியின் நம்பிக்கைக்குரியவரும், நம்மிடையே இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருப்பவருமான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கும், அம்மா அவர்களது அரசின் சார்பிலும், தமிழக மக்கள் அனைவரது சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2006-07 முதல் 2010-11 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு, ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 14,314.55 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு அம்மா அவர்களது அரசால் ஒதுக்கப்பட்ட தொகை, 32,907.51 கோடி ரூபாய். அது மட்டுமல்ல, அம்மா அவர்களது ஆட்சியில் 2016-17 முதல் 2019-20 வரையிலான நான்காண்டு காலத்திற்கு ரூ.44,477.99 கோடி அம்மா அவர்களது அரசால் வழங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த நிதியாண்டு, அதாவது 2020-21-ம் நிதியாண்டிற்கு 15,863.37 கோடி ரூபாய் நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2006 முதல் 2011 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு திமுக ஒதுக்கிய மொத்த நிதி ஒதுக்கீட்டினைவிட, 1548 கோடி ரூபாய், கூடுதலாக இந்த ஓராண்டில் மட்டுமே நாம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கியுள்ளோம் என்பதைப் பெருமிதத்துடன் இங்கே எடுத்துக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.மக்கள் நல்வாழ்வுத் துறையில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும், அம்மா அவர்களது அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான மக்கள் நலப் பணிகளையும், நலத் திட்ட உதவிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

அம்மா அவர்களது அரசு, இப்படி, மக்களுடைய தேவை என்ன, அதை எப்படியெல்லாம் செய்து முடிக்கலாம், என்று ஒவ்வொரு கணமும் சிந்தித்து செயலாற்றி, சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.இந்த சாதனைகள், இதற்கு முன்னர் ஆண்ட திமுக ஆட்சியால் எண்ணிப் பார்க்கவும் முடிந்திராத சாதனைகள், வேறு எந்த மாநிலமும் கூட செய்திராத சாதனைகள் என்பதையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டு நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினுக்குத்தான் இதைப் பாராட்ட மனம் வரவில்லை. பாராட்டக் கூட வேண்டாம், ஏற்றுக் கொள்ளக் கூட அவரால் முடியவில்லை. இந்தத் திட்டங்களை எப்படியெல்லாம் குறை சொல்லலாம், இந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த, யாரைத் தூண்டிவிடலாம், தன்னுடைய பதவிப் பசிக்காக யாரை இரையாக்கலாம் என்ற, சுயநலச் சிந்தனையோடு, மக்கள் நலனைப் பற்றிய கவலை ஒரு சிறிதும் இன்றி, மக்கள் நல விரோதியாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் இப்படியெல்லாம் செயல்படுவதற்கு ஒரே அடிப்படைக் காரணம், எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு அவர் தயாராகி விட்டார்.
அவரது சுயநல சிந்தனைக்கு மருந்தாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடிய பாடலையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“மண்வெட்டி கையில் எடுப்பார் – சிலபேர்
மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்”

என்னும் பாடலின் பொருளினை உணர்ந்து ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் தமிழக மக்கள் அவரை மாற்றுவார்கள் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த ஒரு பணியை வழங்கினாலும், அதனைச் சிறப்பாக, விரைவாகச் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர் அன்புச் சகோதரர் ராஜேந்திர பாலாஜி. அவர் பால் வளத் துறையின் வளர்ச்சிக்கு, பால் உற்பத்தி பெருக்கத்திற்குச் சிறப்பான பணியாற்றி வருகிறார். அந்த தனித் தன்மை காரணமாக இந்த விழாவையும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்விழாவை அரசு விழா போல் இல்லாமல் ஒரு மாநாடு போல பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ள அன்புச் சகோதரர் மாண்புமிகு பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர், கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கும், தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைவதற்கு அயராது உழைத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.