தற்போதைய செய்திகள்

திப்பிரவு அணைத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி

தேனி:-

திப்பிரவு அணைத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சேட் அருணாசலம் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், கழக மக்களவை குழு தலைவரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் சுப்பையா பாண்டியன், வேங்கை சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை உருவாக்கி, ஒரு சாதாரண மனிதனும் உயர்பதவிக்கு வரமுடியும் என்பதை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அவருக்கு முன்பாக தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் மிட்டா மிராசுதாரர், ஜமீன்தார், பணக்காரர்கள் தான் உயர் பதவிக்கு வரமுடியும். பேரறிஞர் அண்ணாவின் காலத்தில் தான் இதனை மாற்றி சாதாரண மனிதனும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, ஏன் முதல்வராக வரலாம் என்ற நிலையை உருவாக்கினார். அவரும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான். தன்னுடைய முயற்சியால், திறமையால், எழுத்தாற்றலால், எல்லா துறைகளிலும் சிறப்பாக விளங்கினார். அதனால் தான் அவருக்கு பேரறிஞர் அண்ணா என்று பெயர் சூட்டப்பட்டது.

தேனி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி, கலை கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, கடந்த மாதம் சட்டக்கல்லூரி என எல்லா கல்லூரிகளையும் கொண்டு வந்தது நமது கழக அரசு தான். ஆண்டிபட்டி பகுதியில் சில இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. தேர்தல் நேரத்தில் நீங்களெல்லாம் சொன்னதுபோல் நீண்டநாட்களாக கிடப்பில் உள்ள திப்பிரவு அணைத்திட்டம் மற்றும் விவசாய சங்கத்தில் இருந்து என்னிடம் கூறிய கே.கே.பட்டியிலிருந்து பைப் லைன் அமைத்து விவசாய நிலங்களுக்காக ஒரு திட்டத்தை கேட்டனர். அதை முதல்வர், துணை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவாக நிறைவேற்றப்படும்.

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனைத்து சலுகைகளையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருப்பது நமது கழக ஆட்சிதான். உங்களுடைய கோரிக்கைகள், தேவைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன். அதற்காக ஒரு அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். உங்களின் கோரிக்கைகளை அதன் மூலம் நீங்கள் அனுப்பினால் அடுத்த நொடி என்னுடைய பார்வைக்கு வந்துவிடும். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.