திருச்சி

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறைகூற ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது – கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு

திருச்சி

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறைகூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை என கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி கூறினார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் கடைவீதி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தியமலை ஆகிய இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டங்களில் கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:- 

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாட தகுதியான இயக்கம் அ.இ.அ.தி.மு.க. தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட இயக்கம், வாரிசு அரசியல் இல்லாத இயக்கம். ஆனால், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு முதலமைச்சராக வந்த கருணாநிதி தி.மு.கவில் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே முன்னிலை படுத்தினார். கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் முக.ஸ்டாலின், மகள் கனிமொழி, மருமகன் தயாநிதிமாறன் ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர். தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

அவருக்கு பிறகு அவரது மகன் உதயநிதிஸ்டாலின் தி.மு.க தலைவராக வரவேண்டும் என்பதற்காக அவரை தி.மு.க இளைஞரணி செயலாளராக்கி உள்ளார். வாரிசு அரசியல் நடத்தும் தி.மு.கவிற்கு அண்ணா பிறந்த நாளை கொண்டாட தகுதியில்லை. சென்னையில் உள்ள புத்தகக் கடைகளில் அதிகம் புத்தகம் வாங்கியவர்கள் இரண்டு பேர். ஒருவர் மைசூர் மகாராஜா, இன்னொருவர் அறிஞர் அண்ணா. தமிழத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தினார் அறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு தி.மு.கவை கருணாநிதி தனது குடும்ப சொத்தாக, குடும்ப கட்சியாக மாற்றி விட்டார். இதனை எதிர்த்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க அழிந்து விட்டது. இனி நாம்தான் முதல்வர் என கருணாநிதி பகல் கனவு கண்டு கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தாயாக வந்து கழகத்தையும், தமிழகத்தையும் காத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதமாக்க கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கெண்டதன் மூலம் சுமார் 8 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். 43 வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ளனர். இதன் மூலம் 35 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புபெற உள்ளனர்.

மேலும், லண்டன் மாநகரத்தில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையை சென்று பார்த்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த மருத்துவமனை கிளையை தமிழகத்தில் தொடங்க ஒப்பந்தம் போட்டுள்ளார். விரைவில் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வரவும் ஆவண செய்துள்ளார். அங்கு எழுபது லிட்டர் பால் தரகூடிய மாடுகள் நிறைந்த பால்பண்ணையை பார்த்துவிட்டு அதேபோல் பால்பண்ணைகளை தமிழகத்தில் அமைக்கவும் முயற்சி எடுத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

இப்படி தமிழகத்திற்கு நன்மைகள் பயக்கும் வெளிநாட்டு பயனத்தை வெற்றிகரமாக முடித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தை கேலியும், கிண்டலும் செய்கிறார். துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாத மு.கஸ்டாலின். பொதுக்கூட்டத்தில் கூட அவரால் துண்டுச்சீட்டு இல்லாமல் சரியாக பேச முடியாது. அனிதா என்பதற்கு பதிலாக கனிதா என்கிறார்.

தமிழகத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து வந்துள்ளார். ஆனால், தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடே கிடையாது. தி.மு.க. ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு வெட்டிபயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி துரிதமாக்கவும் வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து குறைகூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை.விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் கழகம் அமோக வெற்றிபெறுவது உறுதி.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்ஜோதி பேசினார்.

முத்தரசநல்லூர் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச்செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, தலைமைக் கழக பேச்சாளர் எஸ்.எஸ்.இராமசுப்ரமணியன், அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.அழகேசன், பகுதி கழக செயலாளர் டைமண் ஜி.திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.