தற்போதைய செய்திகள்

மழைக்காலங்களில் நோய்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

தூத்துக்குடி:-

மழைக்காலங்களில் நோய்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழ்நாட்டில் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்குவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலும் குடிநீர் விநியோகம் முறையாக பொதுமக்களுக்கு கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்ய கண்காணிப்பு அலுவலர்கள் அவ்வப்போது களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காவது பைப்லைன் திட்டம், கோவில்பட்டி நகராட்சியில் இரண்டாவது பைப்லைன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 248 குடியிருப்பு குடிநீர் திட்டம், 90 குடியிருப்பு குடிநீர் திட்டம், 30 குடியிருப்பு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளதால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவை விட கூடுதலாக கிடைக்கும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மழைநீர் சேமிக்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார். இத்திட்டம் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் விரிவுப்படுத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் விவசாயிகளின் பங்களிப்புடன் மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வருகிற மழைக்காலத்திற்கு முன்பாக குடிமராமத்து பணிகளை தரமாக முடிக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 59.9 சதவீதம் பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை அளவு 52.2 சதவீதம் மட்டுமே கிடைத்தது. முதலமைச்சர் மழைநீர் சேமிப்பு குறித்து அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகள் மற்றும் அதன் குக்கிராமங்களில் உள்ள கழிவு நீர் ஓடைகளை மழைநீர் தேங்கி நிற்காத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறை மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றாநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிப்தீரியா உள்ளிட்ட நோயில் இருந்து குழந்தைகள் மற்றும் முதியோர்கள், பெண்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் தடுப்பூசி போடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில் முத்து மாவட்டம் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்றாக தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கம்பூர் செ.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாவட்ட வன அலுவலர் செந்தில், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் தனபதி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஒய்.டி.ஆர். டெக்னாலஜி நிறுவன நிறுவனர் பரமசிவராஜ், முக்கிய பிரமுகர்கள் இ.பி.ரமேஷ், ஆறுமுகநயினார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.