தற்போதைய செய்திகள்

தருமபுரி சனத்குமார் நதி ரூ.50 கோடியில் புனரமைப்பு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்…

தருமபுரி:-

தருமபுரி ஊராட்சி ஒன்றியம் கோணங்கிநாயக்கனஅள்ளி ஊராட்சி செங்கல்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பில் சனத்குமார் நதி புனரமைப்பு பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணையாளம் அணைக்கட்டு, என்னேகொல்புதூர், ஜெர்த்தலாவ், பொதியன்பள்ளம், மாரியம்மன்கோம்பை, குமராம்பட்டி உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சனத்குமார் நதியை புனரமைக்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூபாய் 50 கோடி மதிப்பில் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு தற்போது இத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

வத்தல்மலையின் நீர் பிடிப்பு பகுதியான நல்லம்பள்ளி ஒன்றியம் தின்னஅள்ளி ஊராட்சியில் தொடங்கும் சனத்குமார் ஏரி தருமபுரி நகராட்சி, தருமபுரி ஒன்றியம் வழியாக சுமார் 42.84 கிலோமீட்டர் தூரம் சென்று மொரப்பூர் ஒன்றியம் கெலவள்ளி ஊராட்சி, கூடுதுறைப்பட்டியில் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இந்நதியின் பெரும்பகுதி தூர்ந்துபோன நிலையிலும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டுள்ளது.

இந்த நதியின் வழித்தடங்களை கண்டறிந்து, அதை புனரமைக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து தற்போது பணிகள் தொடங்கியுள்ளது. சனத்குமார் நதியின் வழித்தடம் முற்றிலுமாக வருவாய் துறை ஆவணங்களைக்கொண்டு நில அளவீடுகள் மேற்கொண்டு உறுதியான எல்லை கற்கள் பதிக்கப்பட்டு, நதியில் மேற்கொள்ளப்பட்ட ஆகிரமிப்புகள் முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சனத்குமார் நதியின் பிரதான மற்றும் கிளை வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டு கம்பிவலை கல் தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த நதியில் நிலத்தடி நீரிணை செறிவூட்ட 383 மூழ்கு குழிகள், 184 செறிவூட்டு குழிகள், 36 செறிவூட்டு கிணறுகள், 52 கம்பிவலை கல் தடுப்பணைகள், 36 கான்கிரீட் தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சனத்குமார் நதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வருவாய்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு, பணிகள் வேகமாக நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், .தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் பொன்னுவேல், சிவபிரகாசம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் அங்குராஜ், ஆறுமுகம், செயற் பொறியாளர் வரதராஜ பெருமாள், வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.