தற்போதைய செய்திகள்

தமிழக கல்வித்துறை அபார வளர்ச்சி – அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

திருவாரூர்:-

தமிழக கல்வித்துறை அபார வளர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் ெதரிவித்தார். திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாமில் பணிவரன்முறை, தகுதி காண்பருவம், சிறப்பு நிலைக்கான ஆணைகளை ஆசிரியர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை, தகுதி காண்பருவம், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற சிறப்பு முகாம் வரும் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இம்மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. இந்நல்ல நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் கல்வித்துறை அபார வளர்ச்சி பெற்றுள்ளது என அனைத்து தரப்பு மக்களால் போற்றப்படுகிறது.

இம்முகாமில் 264 மனுக்கள் பெறப்பட்டு முதல் நாளில் 110 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பணிவரன்முறை, தகுதி காண்பருவம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அரசாக அம்மா அவர்களின் அரசு திகழ்கிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் டி.பார்த்தசாரதி, வட்டார கல்வி அலுவலர் விமலா, நகராட்சி ஆணையர் என்.சங்கரன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி.மூர்த்தி, மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.