தற்போதைய செய்திகள்

காரிமங்கலத்தில் விரைவில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி:-

காரிமங்கலத்தில் விரைவில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பேறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், காரிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் செல்வராஜ், குமார், பாலக்கோடு முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அரங்கநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்பாஷா, நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர கழக செயலாளர் சங்கர் வரவேற்புரையாற்றினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, முன்னாள் அமைச்சர் பா.அண்ணாவி, தலைமைக்கழக பேச்சாளர் எம்.டி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

மக்களின் மனநிலைக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க. என்றைக்கும் செயல்படாது. கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்த தருமபுரி மாவட்டத்தை படிப்படியாக கல்வியில் முன்னேறிய மாவட்டமாக மாற்றியது புரட்சித்தலைவி அம்மா அவர்கள். பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்கள் கல்வியில் பின் தங்கிய ஒன்றியமாக அறிவிக்கப்பட்டது. அந்த ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை அமைத்தது, பாலக்கோட்டில் சார்பு நீதிமன்றம், வணிகவரி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அமைத்து கொடுத்தது கழக அரசு. காரிமங்கலத்தில் புதிய நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும். அதற்கான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து வாக்களித்திருக்கிறார்கள். மக்களுடைய தேவைகளை முழுமையாக புரிந்து கொண்டு அதை செயல்படுத்தும் அரசாக கழக அரசு விளங்கி கொண்டிருக்கிறது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழக உறுப்பினர்களுக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி அடையும்.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கழகம் வெற்றிபெற்று முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி தொடருவார். அனையாலம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு அதற்காக ரூ.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலம் கையகப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

நீர் மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.பாலக்கோட்டில் குளிர்சாதன வசதியுடன் கிடங்கு அமைக்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் அங்கு கிடங்கு கட்டப்படும். மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வருகிறது கழக அரசு. இவ்வாறு செய்யும் அரசை பார்த்து ஒருவர் ஏளனமாக பேசுகிறான் என்றால் அவர் நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறார் என்று அர்த்தமாகும்.

காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தவர் தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும்தான். அவர் என்ன நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவிக்கிறார், அரசியலுக்காக எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறார். அவர் நல்ல எண்ணத்தோடு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட தலைவனுக்கு கீழே உள்ள திமுக தொண்டர்களும் அப்படித்தான் இருப்பார்கள். இன்று தங்கம் 30,000 ரூபாய்க்கு விற்றாலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இப்பொதுக்கூட்டத்தில் காரிமங்கலம் நகர செயலாளர் காந்தி, அரசு வழக்கறிஞர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட பொருளாளர் எம்.பி.எஸ்.சுப்பிரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர கிளைகழக நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் முன்னாள் நகர கழக செயலாளர் ராஜா நன்றி கூறினார்.