திருவண்ணாமலை

271 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அருகே 271 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

கால்நடை உதவி மருத்துவர் சவுமியா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கீழ்பாலூர், கோவில்மாதிமங்கலம், மட்டவெட்டு, சிங்காரவாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 271 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகளை வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக நான்கு ஆடுகள் ஒரு கறவை மாடு வழங்கினார். அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இத்திட்டத்தினை தொடர்ந்து வழங்கி வருகிறார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்களின் வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்து வருகிறது. மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் ஆடு மற்றும் கறவை மாடுகளை விற்க கூடாது. இதனை நீங்களே வைத்து பராமரித்து இதில் வரும் லாபத்தை எடுத்து குடும்பம் நடத்தினால் தான் தமிழக அரசின் முழு பலனும் உங்களை வந்து சேரும்.

இவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.