தமிழகம்

கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் மார்ச் 4- அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்க விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை இன்று (4.3.2020) மாலை 3 மணியளவில் சிறப்புடன் நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதியதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாப் பேருரையாற்றுகிறார்.

விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில், தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசுகிறார். மேலும், இவ்விழாவில் அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர், அரசு தலைமைக் கொறடா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்கின்றனர். முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சு.பிரபாகர் நன்றி கூறுகிறார்.