கடலூர்

தமிழர்கள் நலனுக்கு எதிரான கட்சி தி.மு.க. – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ கடும் தாக்கு

கடலூர்

தமிழர்கள் நலனுக்கு எதிரான கட்சி தி.மு.க. என்று கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லிக்குப்பம் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சத்யா பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

நெல்லிக்குப்பம் நகர கழக செயலாளர் த.சவுந்தர் வரவேற்றார். மாவட்ட கழக பொருளாளரும், அண்ணாகிராமம் ஒன்றிய தலைவருமான வ.ஜானகிராமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கா.பாலசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எஸ்.சேகர், நகரக் கழக அவைத் தலைவர் ஆர்.மனோகர், நகர துணை செயலாளர் ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, தலைமை கழக பேச்சாளர் போளூர் எம்.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

வீராணம் திட்டம் என்றாலே கருணாநிதியின் ஊழல் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அம்மா அதை மாற்றி புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றி சென்னை மக்களின் தாகம் தீர்த்த தர்ம தேவதையாக திகழ்கிறார். பசுமை வீடுகள் என்ற திட்டத்தை கொண்டு வந்து தமிழகத்தில் குடிசைப் பகுதிகளே இல்லாத வீடுகளை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டவர் அம்மா. கடலூர் மாவட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது கடலோர மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளை கட்ட அனுமதியளித்து உடனடியாக கான்கிரீட் வீடுகள் கட்டி தந்தார்.

அதிமுக தமிழர்களின் நலனுக்காகவே பாடுபட்ட கட்சி. ஆனால் திமுக தமிழர்களின் நலன்களுக்கு எதிரான கட்சி. கச்சதீவு, காவேரி உரிமை ஆகியவற்றை சொந்த நலனுக்காக விட்டு கொடுத்து தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. தமிழர் நலன்களை கழகம் என்றைக்கும் விட்டுக்கொடுத்தது கிடையாது. 2009-ம் ஆண்டு பக்கத்து நாடான இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாக குண்டு வீசி அழிக்கப்பட்ட போது சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரத நாடகம் நடத்தினார் கருணாநிதி. பின்பு மூன்று மணி நேரம் கழித்து போர் நின்றுவிட்டது என்று அறிவித்தார். இதை நம்பி மக்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தபோது விமானங்கள் குண்டு வீசி அவர்களை கொன்று குவித்தது, இதற்கு காரணம் கருணாநிதி.

இலங்கையில் போர் நடந்த போது மத்தியில் ஆட்சி நடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக டெல்லி சென்று சோனியாவிடம் நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எங்கள் ஆதரவை வாபஸ் வாங்கி விடுவோம் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், உடனடியாக அந்தப் போரை நிறுத்தி இருப்பார்கள். ஆனால் கருணாநிதி அதை செய்யவில்லை. இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழினத்திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. இதுவரை ஒரு நன்மையும் திமுக தமிழர்களுக்கு செய்யவில்லை. இனியும் செய்யாது.

அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மா பொங்கல் பரிசாக 100 ரூபாய் கொடுத்தார். ஆனால் எடப்பாடி கே.பழனிசாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் உழைக்கும் மக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவேன் என்று அறிவித்தார். அதை நமது முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். அம்மா ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக நமது முதல்வர் அறிவித்துள்ளார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளை காவேரி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளார். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மத்திய மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களில் நான்கு ஒன்றியங்களை நாம் கைப்பற்றினோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீத வெற்றிக்கு நாம் பாடுபட்டு கழகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பேசினார்,

இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ம.ப.பன்னீர்செல்வம், நகர பொருளாளர் டி.ரங்கராஜன், இணை செயலாளர் லட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் அழகு, கிஷோர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தனசேகரன், மகளிரணி செயலாளர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.