தமிழகம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:-

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், முகலிவாக்கம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் தீனா என்கிற திவா என்பவர் 15.9.2019 அன்று முகலிவாக்கம் பழைய போஸ்ட் ஆபிஸ் அருகே இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சிட்லபாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மின் கம்பம் மீது சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சேதுராஜ் என்பவர் எதிர்பாராத விதமாக மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட இரண்டு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த செல்வன் தீனா என்கிற திவா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தீனா என்கிற திவா மற்றும் சேதுராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.