தற்போதைய செய்திகள்

அம்மாவின் அரசை குறை கூற முடியாததால் போராட்டங்களை தி.மு.க. தூண்டி விடுகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றச்சாட்டு

திண்டுக்கல்

அம்மாவின் அரசை குறை கூற முடியாததால் போராட்டங்களை தி.மு.க. தூண்டி விடுகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொடைக்கான லில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நகர செயலாளர் எம்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர், துணை முதல்வர் அருமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். இதனை அரசியல் கட்சி தலைவர்களும். நடுநிலை நாளிதழ்களும் பல்வேறு சங்கங்களும் வரவேற்றுள்ளன.
சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் வெளிநடப்பு செய்தார்? வெளிநடப்பு செய்வதற்காகத்தான் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? தமிழக அரசுக்கு எதிராக போராட எந்த காரணங்களும் இல்லை.

அதனால் ஏதாவது போராட்டத்தை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் என பல்வேறு போராட்டங்களை திமுக தூண்டிவிட்டது. அத்தனையும் பிசுபிசுத்து போய்விட்டது. அதனால் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இஸ்லாமியரை தூண்டி விடுகிறார் ஸ்டாலின். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெளிவான விளக்கங்களை அளித்து பேசினார்.

அண்டை நாடுகளில் அவதிப்பட கூடிய இந்துக்கள் நம் நாடு திரும்பும்போது அவர்களின் போர்வையில் தீவிரவாதிகள் வந்துவிடக் கூடும் என்பதற்காக இச்சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என தெளிவாக கூறியதனால் கழக அரசு அதனை ஆதரித்தது. இந்தியாவில் எந்த ஒரு இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதை தடுக்கும் அரணாக கழக அரசு இருக்கும். திமுகவின் நாடகத்தை இஸ்லாமியர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

முதல்வரை விவசாயி மகனா? என ஸ்டாலின் கேட்கிறார். நானும் விவசாயி என சொல்லிக்கொண்டு சென்னையை விட்டு வெளியேறாத அவர் நமது முதல்வரை பார்த்து கூறுகிறார். விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதற்காக அத்தனை குளங்களையும், ஏரிகளையும் தூர்வார செய்து குடிமராமத்து நாயகனாக நமது முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வருகிறார். அரசை பார்த்து மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக ஸ்டாலின் கூறுகிறார்? மத்திய அரசோடு ஜால்ரா இல்லை. இணக்கமாக உள்ளோம். அதனால் தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சாதிக் பாட்ஷா, ரமேஷ் மற்றும் பலர் மர்மமான முறையில் இறந்தார்கள். அதற்கு இன்று வரை காரணம் தெரியவில்லை.திமுக ஆட்சி காலத்தில் செய்த தில்லுமுல்லுகளில் தான் தற்போது கொடைக்கானலில் பல ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும். புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர் நமது முதல்வரும் துணை முதல்வரும். நல்லாட்சி நடத்துகிற, தமிழக மக்களின் கனவுகளை நனவாக்கி வருகின்ற முதல்வருக்கும் துணை முதல்வருக்கு ஆதரவாக அரணாக தமிழக மக்கள் என்றென்றும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

கூட்டத்தில் மேல்மலை ஒன்றிய செயலாளர் முருகன். கீழ்மலை ஒன்றிய செயலாளர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், நகர துணை செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பிச்சை, கூட்டுறவு வங்கி தலைவர் முகமது முஸ்தபா, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் சுந்தரம், அழகு வினோத், சுதாகர் பிரபு, பருக் அஹமது மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.