சிறப்பு செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு 11,000 சிறப்பு பேருந்துகள் * முன்பதிவு வருகிற 23-ந்தேதி தொடக்கம் * அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை:-

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து இந்த ஆண்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு வருகிற 23-ந்தேதி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 03/11/2018 முதல் 05/11/2018 வரை கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் 4,005 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவற்றில், 7,19,480 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் , தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24/10/2019 முதல் 26/10/2019 வரையில் மேற்கூறிய இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 27/10/2019 முதல் 30/10/2019 வரை 4627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளிப் பண்டிகை முடிந்து ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள, நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கு வருகிற 23-ந்தேதி முன்பதிவு தொடங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது 2,04,115 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். தற்பொழுது 33,984 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் வருகின்ற ஆயூத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருப்பதால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்துநிலையம் கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை 04.10.2019 முதல் 06.10.2019 ஞாயிற்றுக் கிழமை வரை திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.