சிறப்பு செய்திகள்

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 6283 பணியாளரக்ளுக்கு ரூ.1093 கோடி பணப்பயன்கள் – முதலமைச்சர் நேரில் வழங்கி வாழ்த்து.

ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்கப்படவில்லை என்று கூப்பாடு போட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 6283 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.1093 கோடி பணப்பயன்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  நேரில் வழங்கி வாழ்த்தினார். 

சென்னை

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மூலமாக புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், பணியாளர்களின் நலன் கருதி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் (2011-12 முதல் 2018-2019 வரை) பங்கு மூலதன உதவி , கடன், வழிவகை முன்பணம், உதவித்தொகை, மாணவர் கட்டணச் சலுகையை ஈடு செய்தல் ஆகிய வகைகளில் 15,040 கோடியே 9 லட்சம் ரூபாயை புரட்சித்தலைவி அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. குறிப்பாக, ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு ஆகிய சட்டரீதியான பணப்பலன்கள் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான வட்டி முதலியன வழங்கும் பொருட்டு, 2017-2018-ம் நிதியாண்டில் 2147 கோடியே 39 லட்சம் ரூபாயும், 2018-2019-ம் நிதியாண்டில் 487 கோடியே 56 லட்சம் ரூபாயும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. மேற்படி, தமிழ்நாடு அரசின் நிதியுதவி மூலம் மார்ச் 2018 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சட்டரீதியான பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டரீதியான பணப்பலன்களான சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு, பங்களிப்பு ஓய்வூதியம் ஆகியவற்றினை வழங்கும் பொருட்டு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் 1,093 கோடி ரூபாயை வழங்கிட புரட்சித்தலைவி அம்மாவின் அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – கோயம்புத்தூர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – கும்பகோணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – மதுரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – திருநெல்வேலி சார்ந்த ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான நிலுவையில் உள்ள பல்வேறு நிலுவைத் தொகைகளான வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பணிக்கொடை வித்தியாசம் மற்றும் நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து, ஆக மொத்தம் 6,283 ஓய்வு பெற்ற பணியாளர்கள் பயனடைவார்கள்.

அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 9 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்களுக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை – மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜி.கணேசன், தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.