சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1608 கோடி மத்திய அரசு மானியத்தொகை விடுவிப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நகர்புறம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயலாக்க மானியத் தொகை 1608.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு தமிழகத்தின் நகர்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2015-16-ம் ஆண்டு முதல் 2019-20 வரையில்,தவணைத் தொகையான 12,312 கோடியே 74 லட்சம் ரூபாயில் இதுவரை தமிழகத்திற்கு 8,531 கோடியே 94 லட்சம் ரூபாய் அடிப்படை மானியமாக விடுவித்துள்ளது. மேலும் செயலாக்க மானியத்தின் கீழ்,2016-17 முதல் 2018-19 வரையிலான 3 ஆண்டுகளின் மொத்த ஒதுக்கீடான 1691 கோடியே 26 லட்சம் ரூபாயில், மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு 2016-17 ம் ஆண்டு செயலாக்க மானியத் தொகையான ரூ 494.99 கோடியை விடுவித்துள்ளது. இது நிதி விடுவிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சரை கடந்த மாதம் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.மேலும் தமிழக முதல்வர் கடந்த மாதம் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14 வது மத்திய நிதி ஆணையத்தின் 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளுக்கான செயலாக்க மானியம் ரூ.1196.27 கோடியும், 2018-19-ம் ஆண்டின் 2-ம் தவணைத்தொகை மற்றும் 2019-20-ம் ஆண்டு முதல் தவணை தொகை சேர்த்து மொத்தம் ரூ.3,780.81 கோடி அடிப்படை மானியத் தொகையும், மொத்தம் 4977.18 கோடி ரூபாய் நகர்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, செயல்பாட்டு மானியம் மற்றும் அடிப்படை மானியமாக, 14-வது நிதிக் குழுவின் கீழ் உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்தேன்.

மத்திய அரசு ,தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக ஏற்று பரிந்துரையின்படி 17-ந்தேதி 14 வது நிதிக் குழு
பரிந்துரையின்படி, அடிப்படை மானியத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டு 2-ம் தவணை தொகையாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.731.09 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ 876.94 கோடியும் என மொத்தம் அடிப்படை மானியத் தொகை 1608.03 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. அதற்காக,மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது சார்பாக தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு நகர்ப்புரம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடப்பு நிதி ஆண்டிற்கான அடிப்படை மானியம் 2019-20-ம் ஆண்டு முதல் தவணைத் தொகை ரூ 2172.78 கோடியும்,2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளுக்கான செயலாக்க மானியம் ரூ 1196.27 கோடியும் என மொத்தம் 3,369.05 கோடி ரூபாய் நடப்பு நிதி ஆண்டுத் தொகையாக விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.