தற்போதைய செய்திகள்

மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகரில் ரூ.32 லட்சத்தில் புதிய கழிவுநீரேற்று கிணறு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பணியை தொடங்கி வைத்தார்

மதுரை

மதுரை மாநகராட்சி 21-வது வார்டு பெத்தானியாபுரம் பல்லவன் நகரில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீரேற்று கிணறு அமைக்கும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் விராட்டிபத்தில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமான காரணத்தினாலும், அடுக்குமாடி வீடுகள், குடியிருப்புகள் அதிகமான காரணத்தினாலும் கழிவுநீர் அதிகளவில் வருகிறது. எனவே சாக்கடை நிரம்பி சாலையில் செல்வது போன்ற பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே இவற்றை சரி செய்ய பல்லவன் நகரில் ரூ.32 லட்சம் மதிபப்ீட்டில் புதிய கழிவு நீரேற்று கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி அடுத்த 45 நாட்களில் முடிக்கப்படும். அதன்பிறகு கழிவுநீர் குறித்த புகார்கள் ஏற்படாது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களிலும் எந்த நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.1790 கோடி மதிப்பீட்டில் லோயர் கேம்ப்லிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொது நிதியிலிருந்து ரூ.381.90 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணிகள் ரூ.6.65 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு உங்களுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் செய்ய தயாராக உள்ளது. எனவே தொடர்ந்து இந்த மக்கள் நலஅரசிற்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நகர பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் சேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் கோபால் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.