சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற தகுதிபெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை

தமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற தகுதிபெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறை தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக இலக்கிய அணி சார்பில் சென்னையில் நடைபெற்ற சொல்வோம் – வெல்வோம் சிறப்பு பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

1973-ம் ஆண்டு நான் கல்லூரியில் மூன்றாம் வருடம் பட்டப்படிப்பு படித்த போது, அங்கு நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம், அப்பொழுது ஒரு 12, 13 வயதுள்ள, ஒரு இளம்பெண், சிறுமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் சிறப்பாக பேசி வருவதாகவும், அந்த கூட்டம் இன்று உத்தமபாளையத்தில் நடைபெறுவதாக சொன்னபோது, நாங்களெல்லாம் அந்த கூட்டத்தை கேட்பதற்காக போயிருந்தோம், அந்த நேரத்தில் இன்றைக்கு கழகத்தினுடைய இலக்கிய அணி செயலாளராக, இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய வளர்மதி. அங்கு மத்தாப்பு வெடி போல தன்னுடைய பேச்சாற்றலை 13 வயதிலேயே அங்கு பேசி கொண்டிருந்தார்.

அவர் அன்றைய பேசிய பேச்சு, கழகத்தின் நிறுவன தலைவர், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், 1972-ல் இந்த மாபெரும் இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அந்த நோக்கம் என்ன, அந்த நோக்கத்தினுடைய செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன, கோட்பாடுகள் என்ன என்பதையெல்லாம் 13 வயதில் ஒரு சிறுமியாக இருந்து அன்று முழக்கமிட்டவர்தான், இன்றைய கழகத்துடைய இலக்கிய அணி செயலாளராக புரட்சித்தலைவர் காலத்திலேயும் அமைச்சராகவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்திலேயும் அமைச்சராகவும், பல்வேறு பொறுப்புகளில் அவர்கள் பிரகாசித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சிறுவயதில் இருந்து இயக்கத்திற்கு ஆற்றிய பணி, கடமை.

ஆக யார் ஒருவர் தொண்டனாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் விசுவாசமிக்க தொண்டராக தன்னுடைய அரசியல் வாழ்க்கை மேற்கொண்டார்கள் எனில், உறுதியாக டாக்டர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் ஆன்மா அவர்களை மிகஉயரிய உன்னத நிலைக்கு எடுத்துக் கொண்டு நிலை நிறுத்தும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வரலாறாக இன்று நிலைத்திருக்கிறது. ஆக இன்றைக்கு நம்முடைய பணி என்ன, இந்த பணியினுடைய உட்பொருள், கரு என்ன, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் இந்த பேச்சாற்றலை, மக்களிடத்தில் எப்படி எடுத்து செல்லவேண்டும் என்பதற்கு நமக்கு அடித்தளமிட்டவர்.

ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணா கழகத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள் அடித்தளத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களிடத்தில் சுற்றி சுற்றி வந்தது. யாரும் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவியில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்துகின்ற போது மக்களுடைய நன்மையை, மக்களுடைய நல்வாழ்வினை, நாட்டினுடைய நன்மையை, அதைக்காட்டிலும் நாம் உயிரெனும் மதிக்கும் தமிழ் மொழியை எவ்வாறு போற்றி அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று இந்த அகில உலகத்திற்கும் பறைசாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலை கேட்க, கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும், மேல்தட்டில் இருக்கின்ற படித்தவர்கள், பண்பாளர்கள், சமூகத்தை பற்றி தெரிந்தவர்கள், அரசியல் அலசி விவாதிக்கக் கூடியவர்கள், இவர்கள் எல்லாம் விரும்பி கேட்டு ரசிக்க மட்டுமல்லாமல், அதன்படி நடக்கவும் செய்ய ஒரு தூண்டுதலாக அமைந்தவர் பேரறிஞர் அண்ணா தான்.

பேரறிஞர் அண்ணாவை பார்த்து, பார்த்து, எத்தனையோ பேர் இந்த கழகத்திற்கு பேச தெரிந்து கொண்டவர்களாக, பேச்சாற்றல் மிக்கவர்களாக, பேச்சு பயிற்சி மூலமாக தங்களை வளர்த்துக் கொண்டவர்களாக அரசியல் வானில் மின்னினார்கள் என்பது நம்முடைய வரலாறு.ஆக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய அடிப்படை, பேரறிஞர் அண்ணா. அவருக்கு இந்த திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக, இந்த வளர்ச்சிக்கு ஒரு சிறு மாசு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கண்ணும், கருத்துமாக இருந்தவர்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அதனால்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் இயக்கம் உருவாகி, புரட்சித் தலைவர் 10 ஆண்டு காலம் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள், இந்த இயக்கத்தை யாரும் வெல்லமுடியாத முதலமைச்சராக, யாரும் வெல்ல முடியாத தலைவராக உருவெடுத்தார் என்று சொன்னால், சாதாரண மக்களிடம் அவ்வளவு அன்பு காட்டினார், பாசம் காட்டினார், அவர் முதலமைச்சராக இருந்த போது ஒவ்வொரு திட்டமும், ஏழை எளிய மக்களை நாடி செல்கின்ற திட்டங்களாக இருந்தது, அவர் அறிவித்த சத்துணவு திட்டத்தை எத்தனையோ பேர் கேலி, கிண்டல் பேசினார்கள், குழந்தைகளை தட்டு ஏந்தவிட்டு விட்டார்கள், பிச்சை எடுக்க வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள், ஆனால் இன்றைக்கு எத்தனை வருடங்கள் ஆகிறது. 40, 45 வருடங்கள் ஆகிறது, 50 லட்சம் குழந்தைகள் இன்று பசியாற உணவு உட்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு உலக சுகாதார மையம் ஆய்வறிக்கையில் புரட்சித் தலைவர் ஆரம்பித்த இந்த சத்துணவு திட்டத்தினால் தான், இன்று பிறக்கின்ற குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுவதால் தான் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள நல்ல சூழல் தமிழகத்தில் இன்று ஏற்பட்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

அதற்கு பின்னாலே வந்த கிட்டதட்ட 16 ஆண்டு காலம் தமிழகத்தில் தலைசிறந்த முதலமைச்சராக, எந்த மாநிலமும் செய்ய முடியாத, மக்களிடம் பெறுகின்ற வரியை, மீண்டும் மக்களுக்கே எடுத்து சென்று, நல்ல பணிகளாக, கடமைகளாக, திட்டங்களாக, மக்கள் நல திட்டங்களாக, தொலைநோக்கு திட்டங்களாக இன்று வாழுகின்ற மக்களுக்கும், எதிர் காலத்தில் வாழபோகின்ற, 50, 100 ஆண்டு காலத்திற்கும் பின்னால் பயன்தரும் வகையில், அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

அம்மா அவர்களின் திட்டங்களும், செயல்களும் உங்களுக்கு நன்றாகவே தெரியும், எப்படி பேச வேண்டும், எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும். என்ன மைய கருத்தை நாம் உருவாக்க வேண்டும். பொதுமக்களிடத்திலே நல்லெண்ணத்தை உருவாக்கிட வேண்டும், பேசுகின்ற போது, நாம் ஆற்றிய, நம்முடைய தலைவர்கள் ஆற்றிய பணிகள், இந்த இயக்கம் செய்த தொண்டுகள், நல்ல திட்டங்கள்,அவருடைய வாழ்க்கையே தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்களை நாடிதான் சென்றது என்பதனை, நாம் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எடுத்து செல்லுகின்ற சிப்பாயாக இந்த தலைமைக் கழகத்தினுடைய பேச்சாளர்கள் இயங்க வேண்டும் என்று இந்த நல்லநேரத்தில் நான் உங்களை விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு ஆட்சி அமைவதற்கு யார் எத்தனை பேர் தியாகங்கள் செய்தார்கள் என்று தெரியாது, ஆனால் பொதுக் கூட்டத்தில் நல்ல பல கருத்துக்களை, நல்ல பல திட்டங்களை, கட்சியினுடைய நற்கொள்கைளை எடுத்துச் செல்லுகின்ற பேச்சாற்றல் மூலம் தான்,ஒரு ஆட்சியை உருவாக்க முடியும், நீடிக்க முடியும், நிலைத்து நிற்க முடியும் என்ற வரலாறு நமக்கிருக்கிறது. ஆக இதெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எங்களுக்கு பின்னாலே பேச உள்ள பொன்னையன் அருமையாக பேசுவார். நெல்லை பாலாஜி இருக்கிறார், அவரெல்லாம் ஒரு கூட்டத்தில் பேசினால், அவர் பேச்சை கேட்டுவிட்டு வீட்டுக்கும் போகும் போது நமக்கு ஒரு மிகப்பெரிய மூச்சு பயிற்சி செய்ததுபோல் இருக்கும், அவர் சிரிக்கவும் பேசுவார், சிந்திக்கவும் பேசுவார், நல்ல கருத்தாகவும் பேசுவார், இந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களை பற்றி பேசுவார், இந்த இயக்கத்திற்கு செய்த தியாகங்களை பற்றி பேசுவார், எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவார், அப்படி இங்கு நிறைந்திருக்கின்ற தலைமைக் கழக பேச்சாளர்கள் அனைவருமே நல்ல பேசக் கூடிய திறமை வாய்ந்தவர்கள், உங்களுடைய பணி இயக்கத்திற்கு தேவையானதாக இருக்கிறது.

உங்களுடைய நலனில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், தலைமை பொறுப்பில் உள்ள எங்களை போன்றவர்களும், மிகவும் அக்கறை கொண்டிருக்கின்றோம், எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என்பதனையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, உங்களுடைய பேச்சாற்றல் மூலம், இரு மாபெரும் தலைவர்கள் செய்த தியாகங்கள், நாட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், முதலமைச்சர் எந்தவொரு சிறுபான்மை மக்களுக்கும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதை தடுக்கின்ற சக்தியாக நாம் இருப்போம் என்று பல்வேறு கூட்டங்களில் பலமுறை சொல்லிவிட்டார். என்னையும் 31 இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தார்கள், நீங்கள் சட்டசபையில் பேச வேண்டுமென்று சொன்னார்கள், சரி நாங்களும் அடுத்த நாளே சட்டசபையில் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதை தடுத்தி நிறுத்துகின்ற சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படும் என்று சொன்னோம், அதற்காக அவர்கள் நன்றி சொல்லி விட்டு சென்றார்கள்,

அப்படி இருந்தாலும் எதிர்கட்சியான தி.மு.க-வால் தவறான பிரச்சாரங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. அதை தடுக்கின்ற சக்தியாக நீங்கள் செயல்படவேண்டும். இதுவரைக்கும் தமிழ்நாடு உருவான காலத்தில் இருந்து அம்மா அவர்களை போல் இஸ்லாமிய பெருமக்களுக்கும், கிறிஸ்தவ பெருமக்களுக்கும் ஆற்றிய பணிகளை யாருமே இன்று வரை செய்யமுடியவில்லை. நீங்கள் அனைவரும் இந்த பெருமைகளையெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்.

சிறுபான்மை மக்கள் மீது பற்றும், பாசமும் வைத்திருக்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான், ஒரே தலைவர்கள் நம்முடைய மக்கள்திலகம் புரட்சித் தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். வேறு யாருக்கும் அந்த உரிமையில்லை, அதேபோல் தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகள் பறிபோகின்ற போது அதை தடுத்து நிறுத்தி சட்ட போராட்டம் நடத்தி உரிமை பெற்று தந்த தலைவராக இருந்தவர் அம்மா அவர்கள் தான்.

இதையெல்லாம் நாட்டு மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் அதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதை கேட்டு, கேட்டு அவர்களின் மனதில், தமிழகத்தை என்றென்றும் ஆளுகின்ற ஒரே தகுதி பெற்ற கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று தெளிவுபடுத்த உங்கள் பேச்சாற்றலால் முடியும். இந்த சிறப்பான பேச்சு பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.