சிறப்பு செய்திகள்

தடுமாற்றத்தில் எதிர்கட்சிகள் : முதல்வர் பேச்சு

 

சென்னை

அரசு போடுகின்ற திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படுகின்றது என்பதால் எதிர்க்கட்சிக்காரர்கள், எதுவும் பேசமுடியாமல் இன்றைக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி, இருப்பாளி ஊராட்சியில் நடைபெற்ற மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது.

எதிர்க்கட்சிகளின் தவறான குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, குடிமராமத்துத் திட்டத்திலே முறைகேடு நடைபெற்றதாக ஒரு தவறான செய்தியை, பொய்யான செய்தியை மக்களிடத்திலே பரப்பி வருகிறார், அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தக் குடிமராமத்துத் திட்டத்தை முழுக்க முழுக்க விவசாயிகளிடத்திலே ஒப்படைக்கிறோம், விவசாயிகள் தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்.

தெரிந்தால் பேசுங்கள்

குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக ஏரிகள் ஆழப்படுத்தப்படுவதோடு, ஏரிகளில் அள்ளப்படுகின்ற வண்டல் மண் அந்த விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுகிறது. இது அற்புதமான திட்டம். ஸ்டாலின் அவர்களே, தயவு கூர்ந்து, தெரிந்தால் பேசுங்கள், விவசாயிகளை தயவு செய்து குறை கூறாதீர்கள்.

இந்தத் திட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டதன் விளைவாக, ஏரிகள் நிறைந்து, கோடை காலங்களில் நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீரும், குடிப்பதற்குத் தேவையான நீரும் கிடைக்கிறது. இந்த அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்த அரசு எங்களுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ரூ 650 கோடி நிதி

பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஓடை மற்றும் நதியின் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. எனவே தடுப்பணைகள் மூலம், அந்த மழைநீர் முழுவதையும் சேமித்து வைத்து, நிலத்தடி நீர் உயர்த்தப்பட வேண்டுமென்று அதிகாரிகளோடு கலந்தாலோசித்து முடிவெடுத்து, மூன்றாண்டு கால திட்டமாக அதனை நாங்கள் அறிவித்தோம். அதன் அடிப்படையில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,

தற்பொழுது ரூ.650 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்கெங்கெல்லாம் ஓடையின் வழியாக, நதியின் வழியாக நீர் செல்கின்றதோ, அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. ஆதனூர் குமாரமங்கலத்தில் சுமார் ரூ.400 கோடி செலவில், தடுப்பணை கட்டப்படுகிறது, அதில் 30 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. காவேரி உபரிநீர் கடலிலே கலப்பதை தடுப்பதற்காக, ஆங்காங்கே கதவணைகள் கட்டுதல், பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாதுகாப்பதற்காக தடுப்பணைகள் அமைத்தல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசு எங்களுடைய அரசு.

565 கோடி ரூபாய் செலவில்

இன்றைக்கு தமிழகத்திலே சுமார் 60 சதவீதம் பேர் வேளாண் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான நீரை எப்படி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு, இன்றைய தினம் முதல் கட்டமாக, பரிட்சார்த்த முறையிலே, சேலம் மாவட்டத்தில், 565 கோடி ரூபாய் செலவில் 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்கான சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி, இருப்பாளி ஊராட்சி, மேட்டுப்பட்டி ஏரியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள வறட்சியான பகுதிகளை செழிப்பாக்குவதற்கான திட்டம் தான் இந்தத் திட்டமாகும். விவசாயிகள் செழிப்போடு வாழ வேண்டும், விவசாயத் தொழிலாளிக்கு நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம், அந்த லட்சியத்தை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய முதல் பணி என்ற நோக்கத்தில் இன்றைய தினம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுகின்றபொழுது, திறந்து விடப்படும் உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. அந்த உபரிநீரை எடுத்து 100 ஏரிகளிலும் நிரப்பப்படுகிறது. எங்கே தண்ணீர் எடுக்கப்படுகிறது, எங்கே மின் மோட்டார் மூலமாக தண்ணீரை சேமித்து அதிலிருந்து எப்படி மின் மோட்டார் மூலமாக மற்ற ஏரிகளுக்கு நிரப்பப்படுகின்றது என்பதை தெளிவாகச் சொன்னோம்.

முழுமையாக புரிந்துகொள்ளுங்கள்

நாங்கள் செய்கின்ற திட்டங்களை முழுமையாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள், நாங்கள் அப்படியல்ல, செயல் வீரர்கள், செயலிலே நாங்கள் காட்டிக் கொண்டிருக்கின்றோம். 11 மாதங்கள் கழித்துப் பார்க்கின்றபொழுது, முதலமைச்சர் இருப்பாளியிலே பேசினார், அதற்கு இன்றைக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கின்றார், நாங்கள் கண்ட காட்சி கனவல்ல, அது நனவாக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி உங்கள் மனதில் இடம்பெற வேண்டும். நான் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன், நமது பொதுப்பணித் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளர்கள் உட்பட அனைத்து பொறியாளர்களும் ஒருங்கிணைந்து, இரவு, பகல் பாராமல் வெகு சிறப்பாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.

பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு நன்றி

அதேபோல், நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு அமைக்கப்பட்ட பொறியாளர்கள் இணைந்து செயல்பட்டு, இந்த 100 ஏரிகளில் நீரை நிரப்புவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிப்பதற்காக, வடிவமைத்துக் கொடுத்த பணி இன்றைக்கு துவங்கப்பட்டிருக்கிறது. அதற்காக உங்கள் சார்பாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையிலும், இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு மனமார, உளமாற, நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பான பணி

அதேபோல் இத்திட்டத்தை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு துணை நின்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் மக்களின் சார்பாக, வேளாண் பெருமக்கள் சார்பாக, எனது சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு திட்டங்கள் போட்டாலும், அந்தத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திலே நிறைவேற்றக் கூடிய பணி அதிகாரிகளிடத்திலே தான் இருக்கிறது. எனவே, நான் பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை ஐ.ஏ.எஸ் அதிகாரி முதல் அனைத்துத் துறை அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

குறிப்பிட்ட காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றம்

எனவே தான், அரசு போடுகின்ற திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படுகின்றது என்பதை நான் மனமார உளமாற சொல்லிக்கொள்கிறேன். அதனால் தான், எதிர்க்கட்சிக்காரர்கள், எதுவும் பேசமுடியாமல் இன்றைக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் என்று சொன்னால், ஒன்று நாம் நடத்தும் அரசு, மற்றொன்று அதிகாரிகள். இரண்டு சக்கரமும் சரியாக இருந்தால் தான் இலக்கினை அடைய முடியும்.

இரண்டு சக்கரம்

இப்பொழுது இரண்டு சக்கரமும் சரியாக இருக்கின்றது, இலக்கை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, தான் துறைகள் வாரியாக பல்வேறு விருதுகளை நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு, இந்தியாவிலேயே அதிகமாக தேசிய விருதுகளை பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் என்ன நடைபெற்றது என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்கிறார்கள். இவ்வளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், துறைகள் வாரியாக சிறப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்கள் பயன்பெற்றதன் விளைவாக, இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக விளங்குகின்ற காரணத்தினால் தான் மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

எங்கள் மடியிலே கனமில்லை, அதனால் வழியிலே பயமில்லை

எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு, அரசின் மீது தவறான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு குற்றச்சாட்டுகள் சொன்னாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் மடியிலே கனமில்லை, அதனால் வழியிலே பயமில்லை, எங்களுடைய மனம் திடமாக இருக்கின்றது, எடுக்கின்ற முடிவும் திடமானது.

அந்தத் திடமான எண்ணத்தின் அடிப்படையில், நிறைய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள், மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய லட்சியம், அந்த லட்சியப் பயணத்திலே நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பேசினார்.