சிறப்பு செய்திகள்

காவிரி-கோதாவரி திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்: முதல்வர் திட்டவட்டம்

சென்னை

சேலம் மாவட்டம், எடப்பாடி, இருப்பாளி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது.

காவேரி-கோதாவரி திட்டம்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நஞ்சைப் புகழூர் கிராமத்தில் காவேரியாற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டத்திற்கான விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது, அந்தப் பணியும் விரைவாகத் தொடங்கவுள்ளது. எங்களுடைய கனவுத் திட்டமான காவேரி-கோதாவரி திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது, தமிழகத்திற்கு சுமார் 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

மத்திய அமைச்சரின் முயற்சி

மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பணிகள் விரைவாக நிறைவு பெறும். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மூன்று மாநிலங்களும் இணைக்கப்பட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் நீர் ஆதாரம் பெறும். மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்பொழுது, காவிரிக்கரையின் இரு பகுதிகளிலும், 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வறண்ட ஏரிகள் அனைத்தும் நீரேற்றம் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்படும்.

இரண்டு மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் நீரேற்று பணியை துவக்கியிருக்கின்றோம். அதேபோல, இரண்டாம்கட்டமாக, வசிஷ்ட நதியில் தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் அம்மா அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநில முதலமைச்சரின் காவேரி-கோதாவரி இணைப்பிற்கு பேச்சு வார்த்தை நடத்தவேண்டுமென்று நான் கடிதம் மூலமாக கேட்டிருந்தேன், அவரும் சம்மதித்துள்ளார். எனவே, முதற்கட்டமாக, இன்றையதினம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் , மீன்வளத் துறை அமைச்சர் , ஆந்திர முதலமைச்சரை சந்தித்து என்னுடைய கடிதத்தை அவர்களிடம் வழங்கியிருக்கின்றார்கள்.

கனவு திட்டத்தை நிறைவேற்றுவோம்

அதேபோல, தெலுங்கானா முதலமைச்சரையும் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம், அவர்களும் விரைந்து நேரம் வழங்குவதாகச் சொல்லியிருக்கின்றார்கள். எனவே, மூன்று முதலமைச்சர்களும் ஒன்றாக இணைந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவுத் திட்டமான இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து, அதனை மத்திய அரசிடம் சமர்ப்பித்து நிறைவேற்றுவோம்.

தென் மாவட்டம் செழிக்கும்

இத்திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரை கரூர் கதவணையில் தேக்கி, அங்கிருந்து, கிட்டத்தட்ட 14 ஆயிரம் கோடி ரூபாயில் வெட்டப்படும் பிரதான கால்வாய்கள் மூலமாக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த வறண்ட பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு நீர் வழங்கப்படும். இதனால், தென் மாவட்டங்கள் முழுவதும் செழிக்கும், இதுதான் எங்கள் இலட்சியம். அம்மா அவர்கள் எண்ணியதை நாங்கள் நனவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
காவேரி-கோதாவரி இணைப்புத் திட்டம் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். மத்தியில் இணக்கமான உறவு இருக்கின்ற காரணத்தினால்தான் இன்று பல்வேறு பணிகள் சாத்தியமாக இருந்து கொண்டிருக்கிறது. நல்லது நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிச்சயமாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியோடும், வேளாண் பெருமக்களின் ஆசியோடும் இந்தத் திட்டம் நிறைவேறும்.

இவ்வாறு பேசினார்.