தற்போதைய செய்திகள்

2021-ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி தான் மலரும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை

2021-ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி தான் மலரும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

அம்மாவின் பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாடுவதை பார்த்து எதிர்க்கட்சிகள் பயத்தில் உள்ளன. புரட்சித் தலைவருக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் குழந்தைகள் கிடையாது. தமிழக மக்களை தான் குழந்தைகளாக நேசித்தனர். புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிக்கும்போது கருணாநிதி கேரண்டி கிடையாது என்று கூறினார். ஆனால் கட்சி தொடங்கிய 6 மாதத்தில் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று திமுகவை மூன்றாம் இடத்திற்கு கொண்டு சென்று முக்காடு போட வைத்தார்.

ஸ்டாலின் கிளி ஜோசியக்காரன் போல் ஆட்சி இருக்காது என்று கூறி வந்தார். ஆனால் மூன்று ஆண்டை கடந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அடுத்து வரப்போகும் 2021 தேர்தலில் அதிமுக ஆட்சிதான் அமையும். அதற்கு முன்னோட்டம் தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களை நம்பாமல் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை நம்பியுள்ளார். எத்தனை பேர் வந்தாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.

திமுக ஆட்சியின்போது 2008-ல் கூட்டுறவு தேர்தலை நடத்த முடிந்ததா? ஆனால் இன்றைக்கு நாங்கள் இரண்டு முறை கூட்டுறவு சங்க தேர்தலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கூட்டுறவு சங்கங்களில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று அம்மா இருக்கும்போது சட்டம் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா அறிவித்தார். அதனை முதலமைச்சர் செயல்படுத்தினார். மதுரையில் 100 வார்டுகள் உள்ளன. இதில் 53 பெண்கள் மாமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்பு உள்ளது.

இன்றைக்கு ஸ்டாலின் சிறுபான்மையின மக்கள் மீது பிரிவினையை ஏற்படுத்தி மதவாதத்தை தூண்டுகிறார். இதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார். அதையெல்லாம் முறியடிக்க முதலமைச்சர் தயாராக உள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நான் காப்பாற்றுவேன் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். நிச்சயம் ஒரு சிறு துரும்பு கூட படாமல் இந்த அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். திமுகவின் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த நல்ல நாளில் அம்மாவின் 2021-ல் மீண்டும் ஆட்சி மலர நாம் எல்லோரும் சபதம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.