தற்போதைய செய்திகள்

ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் இனி எடுபடாது,அம்மாவின் பிள்ளைகளை தான் மக்கள் நம்புவார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் இனி எடுபடாது. அம்மாவின் பிள்ளைகளான முதலமைச்சர், துணை முதலமைச்சரை தான் மக்கள் நம்புவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் புகழையும், தியாகத்தையும், உழைப்பையும் போற்றும் வகையில் அம்மா பிறந்த பிப்ரவரி 24-ந் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளார்.

அதுமட்டுமல்லாது அம்மா இருந்தபோது மதுரை மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது அம்மா இல்லை என்றாலும் மதுரை மாவட்டத்தில் 30 லட்சம் பேருக்கு வழங்குகிறோம். அம்மாவுக்கு கிடைத்த தொண்டர்கள் போன்று வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. இந்த ஆட்சி இரண்டு நாள் தாங்காது என்று எதிர்கட்சிகள் விமர்சித்தன் ஆனால் இன்றைக்கு இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களும் திரும்பிப் பார்க்கும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் மாநிலம் தமிழகம் என்ற விருதினை முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார்.

காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கு மன்னார்குடி ரங்கநாதன் என்ற விவசாய சங்கத்தை சேர்ந்தவர் பாராட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டபோது முதலமைச்சர் மறுத்து விட்டார். ஆனால் அவர்களோ நாங்கள் நன்றி கூட்டம் நடத்துகிறோம். வரவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். வருகின்ற 7-ந்தேதி முதலமைச்சருக்கு திருவாரூரில் டெல்டா விவசாயிகள் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்துகின்றனர்.

முதலமைச்சர் பாராட்டிற்காக உழைக்கவில்லை. அம்மாவின் கனவை நனைவாக்கத்தான் இரவு பகல் பாராது உழைத்து வருகிறார்.மதுரையில் எல்லா கட்சிக்கும் போன ராஜகண்ணப்பன் திமுகவில் ஸ்டாலினை வைத்து இணைப்பு விழா நடத்தினர். அந்த விழாவிற்கு நிதி தந்தால் வருவேன் என்று ஸ்டாலின் கூறியதால் வேறு வழியில்லாமல் கண்ணப்பன் நிதி வழங்கினார்.

எளிய முதலமைச்சர் என்றால் கேரளா மாநிலத்தைதான் கூறுவார்கள். தற்போது எளிய முதலமைச்சர் என்று கூகுளில் தேடி பார்த்தால் தமிழக முதலமைச்சர் என்று சொல்லும் அந்த அளவிற்கு சாமானிய முதல்வராய் நமது முதலமைச்சர் உள்ளார். இன்றைக்கு ஒரு சிறப்பான நிதி அறிக்கையை முதலமைச்சரும், துணை முதலமைச்சர் தந்துள்ளனர் கடன்சுமையை கட்டுக்குள் தான் வைத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அது வட்டிக்கு மேல் வட்டி ஏற்பட்டு தற்போது நான்கரை லட்சம் கோடி கடனாக உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்திற்காக தற்போது முதலமைச்சர் ரூ.4,350 கோடி ஒதுக்கியுள்ளார்.கடந்த 2011-ம் ஆண்டு பள்ளி கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.14,000 கோடி. தற்பொழுது இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.34,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டங்கள், உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை இப்படி துறைகள் தோறும் நிதியை வாரிவழங்கி தமிழக மக்களுக்கு அட்சய பாத்திரமாக நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தந்துள்ளனர். இதுபோன்ற சாதனை திட்டங்கள் எல்லாம் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியாது. எதற்கெடுத்தாலும் குறை மட்டும் தான் சொல்வார். பெண்கள் தான் புரணி பேசுவார்கள். ஆனால் இன்றைக்கு ஆண்கள் புறணி பேசுகிறார் என்ற நிலையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஸ்டாலினின் சொந்த மாவட்டமான டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலைச்சர் அறிவித்ததற்கு குறை சொல்கிறார். மக்களுக்கு உங்களை பற்றி நன்றாக தெரிந்து விட்டது. இனிமேல் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள். அம்மாவின் பிள்ளைகளான முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை தான் மக்கள் நம்புவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.