தற்போதைய செய்திகள்

அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றியே தீருவோம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சபதம்

மதுரை:-

கழகம் தான் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்ற புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றியே தீருவோம் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சபதம் மேற்கொண்டார்.

மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பகுதி கழக செயலாளர்கள் செழியன், வக்கீல் அசோகன், டால்பின் அசோக், மாவட்ட மகளிரணி செயலாளர் சுகந்தி அசோக், மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் பாண்டியராஜன், விவசாய அணி செயலாளர் ரவி ராஜன், மற்றும் 17 வட்ட கழக செயலாளர்கள் உள்பட 1000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், எம்.எஸ்.பாண்டியன், வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கிரம்மர் சுரேஷ், சீத்தாராமன் மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் துணை மேயர் திரவியம், பகுதி கழக செயலாளர்கள் செந்தில், தளபதி மாரியப்பன், கண்ணன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

‘நீர் அடித்து நீர் விலகாது’ என்பது போல நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நம்மிடம் வந்து இணைந்துள்ளனர். நமக்குள் நடந்தது சகோதர யுத்தம் தான். நமக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பின் திராவிட இயக்கத்தை தனது குடும்ப இயக்கமாக மாற்றியவர் கருணாநிதி. இதனால் வெகுண்டெழுந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புனித இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

இன்றைக்கு சில நடிகர்கள் திடீரென்று முதலமைச்சர் ஆகி விடுவோம் என்று கூறி வருகின்றனர். ஒரு நடிகர் 2021-ல் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகி விடுவேன் என்று கூறுகிறார். இன்னொரு நடிகர் நான் நடித்து முடித்த பின் முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறுகிறார். இந்த நடிகர்களுக்கு கொள்கை கிடையாது.

ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1952-ம் ஆண்டில் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டு அண்ணாவின் கொள்கைகளை தனது திரைப்படங்கள் மூலமாக வெளியிட்டு அதன் மூலம் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக காரணமாக இருந்தார். அதனால்தான் பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவரை தன் இதயக்கனி என்று கூறினார். புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் இந்த இயக்கத்தை கருணாநிதி அழிக்க நினைத்த போது புரட்சித்தலைவி அம்மா காத்து இழந்த சின்னத்தை மீட்டு தந்தார்.

அதேபோல் அம்மாவின் மறைவிற்கு பின் இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தார் ஸ்டாலின். ஆனால் அம்மாவின் ஆத்மா வழிகாட்டுதலோடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மருது சகோதரராக இருந்து இழந்த சின்னத்தை மீட்டு ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் ஒரு துரும்பு அளவை கூட தொட்டு பார்க்க முடியாது.

தற்போது நமது இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து உள்ளது. அதனால் தான் உள்ளாட்சித் தேர்தலை கண்டு ஸ்டாலினை பயப்படுகிறார். எதிர்க்கட்சியான திமுகவே தேர்தலில் போட்டியிட பயப்படும் சூழ்நிலையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கியுள்ளனர்.

நமது இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் கடைசி சூளுரையை நிறைவேற்றும் வகையில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் நாம் அமோக வெற்றி பெறுவோம். அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்றியே தீருவோம். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு தீவிர களப்பணியாற்ற வேண்டும்.

அம்மா அரசு தான் தமிழகத்தில் ஆள வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தற்போது நீங்கள் தாயகத்திற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் கழக வெற்றிக்கு நன்றாக பாடுபடுங்கள் உங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் உருவாக்கித் தருவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.