தமிழகம்

அரியலூரில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு ஒப்புதல்

சென்னை

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.347 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குனர் எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். தற்போது 20 மாவட்டங்களில் 24 அரசு மருத்துவக்
கல்லூரிகள் உள்ளன. திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு கல்லூரிக்கு ரூ.325 கோடி என்ற விகிதத்தில் நாட்டில் 75 அரசு மருத்துவக் கல்லூரிகளை 2021-22-ம் ஆண்டில் அமைத்துக் கொள்ளலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதற்கான செலவை 90:10 என்ற விகிதத்தில் மத்திய அரசும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் முறையே செலவிட வேண்டும். மீதமுள்ள மற்றும் சிறப்பு நிலை மாநிலங்கள் 60:40 என்ற விகிதத்திலும் நிதிப் பங்களிப்பை அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு 60 சதவீத நிதியான ரூ.195 கோடியை மத்திய அரசும், மீதித் தொகையை (ரூ.130 கோடி) மாநில அரசும் பங்கீட்டு கொள்ளும்.

100 எம்.பி.பி.எஸ். இடங்களை கொண்ட புதிய கல்லூரிக்கு ஆண்டொன்றுக்கு நிதி உதவி அளிக்கப்படும். மாநிலங்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்து அதை 150 கல்வி இடங்களாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில், மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து அரியலூரில் புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.

அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே அங்கு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்கும் வகையில் அரியலூர் தாலுகாவில் உள்ள தெற்கு கிராமத்தில் உள்ள 10.83.15 ஹெக்டேர் நிலத்தை புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடம் கட்டுவதற்காக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கு இலவசமாக மாற்றுவதற்காக உத்தரவிடப்பட்டது.

மேலும், அரியலூரில் 150 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு வசதியாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்காக ரூ.347 கோடிக்கு (மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.102.55 கோடி, மருத்துவமனை கட்டிடங்களுக்காக ரூ.125.25 கோடி, குடியிருப்பு பகுதிகளை கட்ட ரூ.119.20 கோடி) இந்த ஆண்டுக்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்புக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்டு அந்தத் தொகைக்கான ஒப்புதலை வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு 20 ஏக்கர் நிலம்ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.