தற்போதைய செய்திகள்

கழகத்தை தவிர வேறு எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் தகுதி கிடையாது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி

கழகத்தை தவிர வேறு எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் தகுதி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மார்க்கெட் ரோடு எம்ஜிஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கவுன்சிலர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. இந்த தொகுதி மக்கள் தங்களுக்கு நிரந்தர குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்களா என்று ஏங்கி இருந்த நேரத்தில் தான் நான் கோவில்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று மக்களின் குடி தண்ணீர் பிரச்சினையை போக்கிட புரட்சித்தலைவி அம்மாவிடம் எடுத்துக் கூறினேன். அம்மா அவர்களும் ரூ.92 கோடியில் இரண்டாவது பைப்லைன் திட்டம் தந்து இந்த தொகுதி மக்களின் 40 ஆண்டு கால கனவை நிறைவேற்றினார். இன்று கோவில்பட்டி நகரில் எந்த நேரமும் குடிநீர் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா என்ற தெய்வ சக்திக்கு முன்னால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் நிற்காது. அம்மா வழியில் தற்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கட்சியும், ஆட்சியும் வீறுநடை போட்டு வருகிறது. கழகம் தான் இனி தமிழகத்தை என்றென்றும் தமிழகத்தை ஆட்சி செய்யும். வேறு எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் தகுதி கிடையாது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.