தற்போதைய செய்திகள்

அம்மா பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் செஞ்சியை அடுத்த தடாகம் கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72- வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை ஒழித்து இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் அம்மா அவர்கள் தான். குழந்தைகளுக்காக குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக அம்மா ஆற்றிய சேவையினை நினைவு கூறும் வகையில் அம்மா பிறந்த நாளை பிப்ரவரி 24 – ந் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க தமிழக அரசு அறிவித்தது மிகவும் பாராட்டத் தக்கது. அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களையும், பெண்களையும் சார்ந்தே இருக்கும். ஆனால் திமுக ஆட்சியாளர்கள் பொய் சொல்லி, மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிகளால் எந்தவித பயனும் தமிழகம் பெறவில்லை. ஏன் தமிழக பிரச்சினைக்கு கூட குரல் கொடுக்க முடியவில்லை. திமுக ஆட்சியாளர்கள் தன் குடும்பத்திற்காகவே ஆட்சி செய்வார்கள். ஆனால் அதிமுகவோ ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும். எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் இருந்தாலும் இல்லா விட்டாலும் கழகமானது 100 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்கள் பணி ஆற்றும் கூறினார். எனவே வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற மக்கள் என்றென்றும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி நகர செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், ஒன்றிய துணை செயலாளர் ராஜாராம், பாசறை செயலாளர் பிரபு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.