சிறப்பு செய்திகள்

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – முதலமைச்சர் தகவல்

தர்மபுரி:-

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்லும் வழியில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஹள்ளியில் தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் பூச்செண்டு கொடுத்து முதலமைச்சரை வரவேற்றார். பின்னர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பூச்செண்டு கொடுத்தும் சால்வை அணிவித்தும் வழிநெடுக நின்று முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்டு அங்கு திரண்டிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

தருமபுரி மாவட்ட கழகத்தின சார்பாக சிறப்பான வரவேற்பு அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர், தருமபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி. அன்பழகனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். “தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்குகோட்டையாக விளங்கி வருகிறது. அ.தி.மு.க பற்றி திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்புபவர்களுக்கு வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் சம்மட்டி அடியை நீங்கள் கொடுக்க வேண்டும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தொடங்கப்பட்ட இயக்கம். ஒடுக்கப்பட்ட, நடுத்தர, ஏழை, எளிய விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகும். இந்த இயக்கத்தில்புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதே அம்மா அரசினுடைய லட்சியம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. வருகிற நகராட்சி பேரூராட்சி தேர்தலிலே மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க.வுக்கு தர வேண்டும்.” உள்ளாட்சித்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று தர்மபுரி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்து காட்ட வேண்டும். மேலும் 2021 ல் நடைபெறும் சட்டமன்றதேர்தலில் அ.தி.மு.க தான் வெல்லும் என்பதை தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முன்னதாக கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் தர்மபுரி மாவட்டம் வருகை தந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.