இந்தியா மற்றவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16, 17-ந்தேதிகளில் நடை அடைப்பு…

திருப்பதி:-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 16-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது. மறுநாள் (17-ந்தேதி) அதிகாலை 1.31 முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16-ந்தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும்.இடைப்பட்ட நேரமான 16-ந்தேதி மதியம் 12 மணி முதல் அன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு  அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு 17-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆனிவார ஆஸ்தானம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்.இதன் காரணமாக 17-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே ஏழுமலையானை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பாதயாத்திரையாக மலை ஏறிவரும் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் திவ்யதரிசன டோக்கன் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிதிவாசம் காம்ப்ளக்ஸ், ரெயில்வே நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன் ஆகியவை 16-ந்தேதி வழங்கப்பட மாட்டாது.அதேபோல் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ந்தேதி மதியம் ஏழுமலையான் கோயிலில் நடக்க வேண்டிய கல்யாண உற்சவம், ஊஞ்சல், சகஸ்ரதீப அலங்காரம் சேவை ஆகிய கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

எனவே கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், சந்திர கிரகணம் மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகியவற்றை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.