தற்போதைய செய்திகள்

3000 செவிலியர்கள்- 500 டாக்டர்கள் விரைவில் நியமனம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

விழுப்புரம்

3 ஆயிரம் செவிலியர்கள், 500 டாக்டர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட முற்றிலும் குளிர்சாதன வசதிகளுடன்கூடிய நவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய உள்ளுடுருவி ஆய்வகத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

இருதய சிகிச்சைக்கான தீவிர சிகிச்சை பிரிவு அரசு விழுப்புரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு, சென்னை, பாண்டிச்சேரி செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லாமல் விழுப்புரத்திலேயே செய்து கொள்வதற்கு அம்மா அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதே போல் கடந்த முறை இந்த கல்லூரிக்கு வருகை தந்த போது சட்டத்துறை அமைச்சர் இந்த மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 40 முதல் 50 பிரசவங்கள் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 3000 நோயாளிகள் வருகிறார்கள்.

அவற்றில் 1500 நபர்கள் மருத்துவமனையில் அட்மிஷன் செய்யப்படுகிறார்கள். சட்டத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதற் கிணங்க தற்போது தாய்சேய் நலக் கட்டடம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தமிழ்க அரசால் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த மகப்பேறு வசதிக்கான சாய்தள வசதி ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் சட்டத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க புற்றுநோய் சிகிச்சைக்கான கருவி ரூ. 8 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு இடங்களில் சி.டி.ஸ்கேன் வசதி நிறுவப் பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் சி.டி.ஸ்கேன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் கூடுதல் சி.டி.ஸ்கேன் விரைவில் நிறுவப்படவுள்ளது.

மருத்துவ உருவகப்படுத்துதல் ஆய்வகம், மருத்துவ மாணவர்களின் பயன்பாட்டிற்காக தேசிய மருத்துவ கழகத்தின் வழிமுறையின்படி ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பல்வேறு பணிகள் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம் ஒரு முன்னோடி மற்றும் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது.

இந்த ஆண்டு மட்டும் அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எம்.பி.பி.எஸ். சீட் இல்லாமல் முதுகலை பட்ட மருத்துவ மேற்படிப்பிற்கு 40 சீட் விழுப்புரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் 2345 செவிலியர்கள், பச்சிளங்குழந்தைகளுக்கான பணியாளர்கள் 500 பேர் என மொத்தம் 3000 செவிலியர்கள் எம்.பி.பி.எஸ் முடித்த 500 மருத்துவர்களுக்கும் பணி நியமனம் செய்யப்படவுள்ளார்கள்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் இல.சுப்பிரமணியன், அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கோ.சங்கரநாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சக்ரபாணி, அ.பிரபு, சுகாதார துணை இயக்குநர்கள் பாலுசாமி, ஜெமினி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் நேரு, ஆவின் தலைவர் பேட்டை வி.முருகன், மாவட்ட பண்டகசாலை தலைவர் ஆர்.பசுபதி, ஒன்றிய செயலாளர்களான வேலு, முத்தமிழ்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.