தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியடைவதை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குறை கூறுவதா? அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் கண்டனம்

கடலூர்:-

பொறுப்பான எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் ஸ்டாலின் பொறுப்பற்ற மனிதராக இருப்பது வெட்கக் கேடான விஷயம் என்று விருதாச்சலத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு.

கடலூர் கிழக்கு மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விஜயமாநகரம் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன்.பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார்.

விருத்தாசலம் நகர கழக செயலாளரும், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவருமான பி.ஆர்.சி.சந்திரகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் டாக்டர் தெய்வ.சேதுபதி, நகர அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பாசறை தலைவர் அருண், முன்னாள் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஏ.ஆர்.வேல்முருகன், நகர துணை செயலாளர் ஆண்டாள் கலியவரதன், நகர கழக பொருளாளர் தங்க.ஜெய்சங்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா, தலைமை கழக பேச்சாளர் ப்ராட்வே எல்.குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:- 

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தலைசிறந்த நாவலாசிரியர், தலைசிறந்த தலைவர், தலைசிறந்த முதலமைச்சராக விளங்கியவர். 1967-ல் 130 சட்டமன்ற உறுப்பினர்களோடு தமிழக முதலமைச்சரானார். அவர் ஆட்சி நடத்திய இரண்டு ஆண்டுகளில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி செவ்வனே நடைபெற்ற ஆட்சியாக அது இருந்தது. அவர் பிறந்திருக்காவிட்டால் தற்போது இந்த நாடு இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அண்ணா அவர்கள் விட்டுச் சென்ற கொள்கைகளில் அடி மாறாமல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆட்சி நடத்தினார். அவரின் வழியிலேயே அம்மாவும் அதன்பிறகு தற்போது எடப்பாடி கே.பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தலைசிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் உடன் அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவந்தார்கள். நானும் முதல்வருடன் சென்றிருந்தேன். அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 90 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் நிறைந்த பால் பண்ணையை பார்வையிட்டு அந்த தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்த முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

பின்பு யாதும் ஊரே என்ற ஒரு தமிழ் தொடர்பு மையத்தை தொடங்கி வைத்தார்கள் 10 நாடுகள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் 8 ஆயிரத்து 735 கோடி வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டு உள்ளோம். 41 நிறுவனங்கள் மூலம் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் 35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அம்மா வழியில் தலைசிறந்த ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அந்த முழுப் பெருமையும் போய் சேரும்.

உலக நாட்டிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றார். ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமராவ் உலக நாடுகள் பலவற்றிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் பொறுப்பான முறையில் அதை வரவேற்கிறார்கள் . இவர்களை ஏன் செல்கிறார் என்று கேட்பதில்லை. மாறாக இங்கே ஒரு பொறுப்பற்ற மனிதராக இருக்கும் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை பற்றி பேசுகிறார்.

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இது போன்ற கேள்விகள் அழகல்ல. பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் ஸ்டாலின் பொறுப்பற்ற மனிதராக இருப்பது வெட்கக் கேடான விஷயம். வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்கிறார். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுபயணம் குறித்து தினந்தோறும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டது. அதற்கு மேலும் வேறு என்ன வேண்டும்.

பொன்முடிக்கு தொழில்துறை பற்றி என்ன தெரியும் பொன்முடி கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அவருக்கு தொழில் துறை பற்றி கேட்பதற்கு என்ன தெரியும். உலக 2011 இல் இருந்து 2019 வரை நடைபெற்ற கழக ஆட்சியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்றிருக்கின்றோம் 2016 முதல் 19 வரை நடைபெற்ற ஆட்சியில் 55 ஆயிரத்து 358 கோடி முதலீடுகளை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி பெற்றிருக்கின்றோம். அம்மா ஆட்சியில் தான் ஃபாக்ஸ்கான், நோக்கியா, மோட்டோரோலா போன்ற கம்பெனிகள் தமிழ் நாட்டிற்கு வந்தன.

வாகன உற்பத்தியின் இயந்திரமாக முதல் 10 இடங்களில் தமிழ்நாடு உள்ளது அம்மா அவர்கள் போர்டு கம்பெனி உரிமையாளரிடம் நேரடியாக பேசி அந்த கம்பெனியை தமிழகத்திற்கு வர வைத்த பெருமை அவரையே சாரும். அதன்பிறகு ஹுண்டாய், பிஎம்டபிள்யூ, நிசான் ஆகிய கம்பனிகள் தமிழகத்திற்கு வந்து தற்போது வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இந்த அரசு மக்களின் நலன்களில் கவனத்தை செலுத்தி தலைசிறந்த அரசாக முன்னேறிக்கொண்டு இருப்பதற்கு தாங்கமுடியாமல் பொறாமையில் ஸ்டாலின் பேசிக் கொண்டிருகின்றார். தமிழக மக்கள் இதை விரும்பவில்லை.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த கூட்டத்தில் பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன், தொரப்பாடி பேரூர் கழக செயலாளர் டி கனகராஜ், மாவட்ட கவுன்சிலர் காடாம்புலியூர் தேவநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் தேவபிரசாத், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, விஜயமாநகரம் எஸ் ராஜேந்திரன் ஆர் வெற்றிவேல் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றியக் கழக துணைச் செயலாளர் தேவி.முருகன் நன்றி கூறினார்.