தற்போதைய செய்திகள்

அம்மாவின் வாக்குபடி கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியும் – தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. உறுதி

சென்னை:-

அம்மாவின் வாக்குபடி கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியும் என்று தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. உறுதிபட கூறினார்.

தென் சென்னை வடக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் சேப்பாக்கம் பகுதி கழக செயலாளர் எம்.கே.சிவா தலைமையில் நடைபெற்றது. தென் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் எம்.ஜி.ஆர். எஸ்..வாசன் வரவேற்றார். இதில் அண்ணா தொழிற்சங்க கன்வீனர் எஸ்.டி.கே..ஜக்கையன் எம்.எல்.ஏ., திரைப்பட நடிகர் அஜய்ரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. பேசியபோது:-

அண்ணா கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை சொல்லி கொடுத்தார். அதை அப்படியே பின்பற்றும் முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவர் எப்போதும் தமிழக மக்களின் நலனை பற்றியே சிந்திக்கிறார். அதற்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறார்.

அம்மா வழியில் சிறப்பாக செயல்படுகிறார். அம்மா எப்படி எல்லோரையும் அரவணைத்து போனாரோ அதுபோன்ற பெருந்தன்மை முதலமைச்சரிடமும் இருக்கிறது. அவர் வெளிநாடுகளுக்கு போய் தமிழ்நாட்டுக்கு ரூ. 8000 கோடி முதலீட்டை பெற்றுத்தந்து 41 ஒப்பந்தங்களை முடித்து வந்திருக்கிறார்.

எடப்பாடியார் வெளிநாட்டு பயணம் வெளிப்படையானது. முன்கூட்டி அறிவித்து விட்டு சென்றார். எழுச்சியாக வழியனுப்பினோம். அவர் திரும்பியபோது உற்சாகமாக வரவேற்றோம். ஆனால் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் ரகசியமாக இருந்தது. அவர் எடப்பாடியாரை விமர்சிக்க தகுதியற்றவர். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் நாம் உண்மையை சொன்னோம். அந்த தேர்தலுக்கு பிறகும் தமிழகத்தில் கழக ஆட்சி நீடிக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நீடிக்கிறது. ஆனால் தி.மு.க.வை நம்பிய ராகுல்காந்தி பதவியை இழந்து தெருவில் நிற்கிறார். கழகம் நூறாண்டு காலம் வரலாறு படைக்கும் என்று அம்மா சொன்னார். அது நிஜமாகி வருகிறது.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ. பேசினார்.