தற்போதைய செய்திகள்

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் தமிழ் பாரம்பரிய கலை பண்பாட்டு போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை

கழக அம்மா பேரவையின் சார்பில் 3000 பெண்கள் பங்கேற்ற தமிழ் பாரம்பரிய கலை பண்பாட்டு போட்டி திருமங்கலத்தில் நடைபெற்றது. இப்போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மற்றும் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் திருமங்கலத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தமிழ் பாரம்பரியம் மிக்க போட்டிகளான கும்மிப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாடகம், நடனம், கவிதை, இசைக்கச்சேரி, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. முதல் பரிசாக ரூ.25000, இரண்டாம் பரிசாக ரூ.20000, மூன்றாம்பரிசு ரூ.15000, நான்காம் பரிசு ரூ.10000 ஐந்தாம்பரிசாக ரூ.5000 வழங்கப்பட்டது இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்க பரிசு வழங்கப்பட்டது.

இதற்கு அம்மா சேரிடபிள் டிரஸ்ட் செயலாளர் ஆர்.பி.யு.பிரியதர்சினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

அம்மாவின் திருப்பெயரால், அம்மாவின் புகழை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் இது போன்ற நிகழ்ச்சிகள் முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு நடைபெற்று வருகின்றன.

பொதுவாக பெண்கள் பொருமைசாலிகள், ஒரு செயலை முன்னெடுத்து செல்வதில் சிறந்தவர்கள். உங்களை போன்ற பெண்களுக்கு பிரச்சினைகளை கையாளும் விதங்களை கற்றுக்கொண்டால் வாழ்வில் நீங்கள் வெற்றி பெறலாம்.

நீங்கள் ஒரு செயலில் இறங்கும் பொழுது எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஒரே மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு தேவையான உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. அவனுக்கு வரும் பிரச்சினைகளை கையாள தெரிய வேண்டும். அதற்குத்தான் இது போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சியை நாங்கள் வழங்கி வருகிறோம்.

ஏற்கனவே கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கழக அம்மா பேரவையின் சார்பில் வழங்கப்பட்டது. தற்போது பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பெண்களுக்கான தமிழ் பாரம்பரிய மிக்க கலை பண்பாட்டு போட்டிகள் நடத்தி வருகிறோம். இது போனற நிகழ்ச்சிகள் மூலம் உங்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அம்மா உருவாக்கினார் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கினார். இதன் மூலம் தமிழகத்தில் 6,75,000 மகளிர் குழுக்கள் உள்ளன. இதில் 1 கோடியே 83 ஆயிரம் பெண்கள் உள்ளனர். இந்த 8 ஆண்டுகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.52,629 கோடியாகும். தற்போது நடப்பாண்டு ரூ.12,500 கோடி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அம்மாவின் உன்னத திட்டமான உழைக்கு மகளிருக்கு இருசக்கர மோட்டார் வாகன திட்டமாகும் இந்த திட்டத்தினை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மா பிறந்தநாளில் பிரதமர் மூலம் தொடங்கி வைத்தனர். இது வரை 1,40,000 பெண்களுக்கு இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் இது வரை 11,46,000 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட நிதி, ரூ.5958 கோடியாகும் அதே போல் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்த திட்டத்தில் இது வரை 56,28,000 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர்.

அதேபோல் புரட்சித்தலைவி அம்மா தொட்டில் குழந்தை திட்டத்தினை உருவாக்கினார். அந்த திட்டத்தினை அன்னை தெரசாவே பாராட்டினார். 1998 முதல் 2019 வரை 5,239 குழந்தைகள் அதன் மூலம் கிடைக்கப்பெற்று அவர்கள் தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர். சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டதில் தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றம் 51 சதவிகிதம் இருந்த போதிலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் 10.7 சதவிகிதமாக உள்ளது. அது மட்டுமல்லாது இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்புக்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்கான எந்த திட்டம் என்றாலும் உடனடியாக செயல்படுத்துவார். அதே போல் இன்றைக்கு முதலமைச்சரும் பெண்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்கள் ஆனாலும் சரி உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார். இந்திய அளவில் பெண்களுக்காக அதிக திட்டங்கள் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் அந்த சாதனையை தற்போது முதலமைச்சர் செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணைமுதலமைச்சர் இருந்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.